ஆம்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காட்டுப் பன்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தது.
ஆம்பூர் அருகே மாச்சம்பட்டு பகுதியில் பேர்ணாம்பட்டு-ஆம்பூர் நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காட்டுப்பன்றி ஒன்று இறந்தது. அந்தப் பன்றியை 3 கி.மீ. தொலைவு உள்ள ஒரு தனியார் நிலத்துக்கு எடுத்துச் சென்று அதை தீயில் சுட்டு, அதன் கறியை விற்பனை செய்ய சிலர் முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் காட்டுப் பன்றியின் கறியை விற்பனை செய்ய முயன்ற மாச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நேரு, விஜயகுமார் ஆகிய இருவரையும் ஆம்பூர் வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இறந்த காட்டுப் பன்றியை எடுத்து சென்ற பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தப்பியோடி தலைமறைவான
3 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆம்பூர் வனப்பகுதியில் காட்டுப் பன்றி, மான் ஆகியவற்றை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. இதைத் தடுக்க வனத் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.