திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து வேலூர் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலையே தனியார் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பின்னர் அவரது மறைவை அடுத்து அரசுப் பேருந்துகளும் படிப்படியாக நிறுத்தப்பட்டதுடன், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், டாஸ்மாக் கடைகள், பல்வேறு கடைகளும் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதலே மிகவும் பின்னடைவு ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். வேலூர் மாவட்டத்திலும் எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில்
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் கூடும் பொதுஇடங்கள், சிலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர். தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளும் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அதேசமயம், அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கியதால் அவற்றில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவசர நிலை கருதி பல்வேறு தரப்பினரும் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்குச் சென்றனர். இதனால், தனியார் வாகனங்களின் வாடகை உயர்த்தி வசூலிக்கப்பட்டது.
இதுதவிர, பெட்ரோல் பங்க்குகள், டாஸ்மாக் மதுபானக் கடைகள், தனியார் ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளும் அடைக்கப்பட்டன.
இதனால், வாகனங்களுக்கு பெட்ரோல் போட பொதுமக்கள் திறந்திருந்த பங்க்குகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில், கருணாநிதி உயிரிழந்த தகவல் மாலை 6.40 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசுப் பேருந்துகளும் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இதனால், மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பத்தூரில்...
திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து திருப்பத்தூரில் கடைகள் அடைக்கப்பட்டன.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி சுற்றுப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மாலை முதல் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் வெளியூர் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.