பள்ளிகொண்டா அருகே கந்தனேரி பகுதியில் கூடுதலாக மற்றொரு டாஸ்மாக் கடை திறக்க அப்பகுதி பொதுமக்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.
பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கந்தனேரி பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள், இறைவன்காடு, ராமாபுரம், அகரம்சேரி ஆகிய இடங்களில் தலா ஒரு டாஸ்மாக் கடை என்று மொத்தம் 5 எண்ணிக்கை டாஸ்மாக் கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
கந்தனேரி, இறைவன்காடு ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு அப்பகுதி பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கந்தனேரி பகுதியில் ஏற்கெனவே 2 டாஸ்மாக் கடைகள் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வருகின்றன. அதை அகற்ற கோரி பாமக சார்பில் ஏற்கெனவே போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் கந்தனேரி பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அப்பகுதியில் கல்வி நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளன. 2 டாஸ்மாக் கடைகள் இருப்பதால் மது அருந்திவிட்டு அவ்வழியாகச் செல்பவர்களிடம் மது அருந்துபவர்கள் பிரச்னை செய்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் மேலும் புதிதாக மற்றொரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் அங்கு மேலும் பிரச்னை உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், ஏற்கெனவே இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் மற்றொரு டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கந்தனேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதி பெண்கள், பொதுமக்கள் திரண்டு சென்று அதிகாரிகளை சந்தித்து, மேலும் புதிய டாஸ்மாக் கடை இப்பகுதியில் திறந்தால் பெண்கள் திரண்டு பெரிய போராட்டத்தை நடத்துவோம் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
டாஸ்மாக் அதிகாரிகள் இதுகுறித்து தங்களுடைய மேலதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்வதாக கூறிச் சென்றுள்ளனர்.