நக்ஸலைட்டுகள் ஒழிப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம் என முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் 1980-ஆம் ஆண்டு நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது. அப்போது, டிஐஜியாக இருந்த வால்டர் தேவாரம் தலைமையில், நக்ஸலைட் ஒழிப்பு ஆபரேஷன் நடைபெற்றது. நக்ஸலைட்டுகள் வீசிய வெடிகுண்டில் காவல் ஆய்வாளர் பழனிசாமி, காவலர்கள் முருகேசன், ஆதிகேசவலு, யேசுதாஸ் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், திருப்பத்தூர் நகர காவல் நிலைய வளாகத்தில், மணி மண்டபம் அமைக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதனை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 38-ஆம் ஆண்டாக திங்கள்கிழமை நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, டிஐஜி வனிதா, எஸ்.பி.பிரவேஷ்குமார், சார்-ஆட்சியர் பி.பிரியங்கா பங்கஜம்,
எம்எல்ஏ நல்லதம்பி, வட்டாட்சியர் டி.எஸ்.சத்தியமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் பேசுகையில், கடந்த 38 ஆண்டுகளாக இந்த நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இவ்வாறு உயிரிழந்த போலீஸாருக்கு தொடர்ந்து நினைவஞ்சலி செலுத்தப்படுவது இங்குதான். இது எந்த நாட்டிலும் இந்நிலை கிடையாது.
1979-80-ஆம் ஆண்டுகளில் நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் திருப்பத்தூர் பகுதியில் அதிகரித்திருந்தது. குண்டு வெடிப்பில் சிக்கிய
4 போலீஸாரில், இறந்த 3 போலீஸாரின் உடல்களை இங்கு கொண்டு வந்தோம். ஆய்வாளர் பழனிசாமியை சிகிச்சைக்காக வேலூருக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார்.
பழனிசாமியின் இறுதிச் சடங்கில் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் கலந்து கொண்டார். அப்போது, பழனிசாமியின் மகள் அஜந்தா 7 வயது சிறுமி, தனது தந்தையின் உடல் அருகே அழுது கொண்டிருந்தார்.
அதன் பின்னர், நக்ஸலைட்டுகளை ஒழிக்கும் ஆபரேஷன் பெயருக்கு "அஜந்தா ஆபரேஷன்' என பெயர் சூட்டப்பட்டது. அதையடுத்து, நக்ஸலைட்டுகள் இல்லாத பகுதியாக திருப்பத்தூர் மாறியது. இதற்கு அப்போது, பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அளித்த ஒத்துழைப்பே காரணம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், அரசியல் பிரமுகர்கள், சமூக சேவகர்கள், உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ்
நன்றி கூறினார்.