ரௌடி வசூர் ராஜாவை போலீஸார் பொய் வழக்கில் கைது செய்துள்ளதாக அவரது தாய் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார்.
வேலூர், சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூரைச் சேர்ந்தவர் வசூர் ராஜா. இவர் மீது பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பணம் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக, கைது செய்யப்பட்டிருந்த அவர், ஜாமீனில் வெளியே வந்திருந்தார். பின்னர், தான் எவ்வித குற்றங்களிலும் ஈடுபடுவதில்லை என்றும், மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், சத்துவாச்சாரி போலீஸார் ரௌடி வசூர் ராஜாவை கடந்த 3-ஆம் தேதி அவரது வீட்டில் கைது செய்தனர். அவரது தாய் கலைச்செல்வி (65), சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோது, மணல் கடத்தலின்போது காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக வசூர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனராம்.
இந்நிலையில், வசூர் ராஜாவின் தாய் கலைச்செல்வி வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எனது கணவர் ஆறுமுகம் ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்துவிட்டார். எனக்கு புற்றுநோய் உள்ளதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எனது ஒரே மகன் ராஜா மீது போலீஸார் மீண்டும் மீண்டும் பொய் வழக்குகளைப் பதிவு செய்து ரௌடியாகவே சித்தரித்து விட்டனர். ராஜா என்ற எனது மகனை வசூர் ராஜா என பட்டம் கொடுத்து போலீஸார் ரௌடியாக்கி விட்டனர். இந்நிலையில், எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் இருந்த ராஜாவை போலீஸார் கடந்த 3-ஆம் தேதி மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. பொய் வழக்குகள் பதிவு செய்து தனது மகனின் வாழ்க்கையை போலீஸாரே சீரழித்து வருகின்றனர். எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ராஜைவை விடுவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், இப்புகார் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.