வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 9) நடைபெற உள்ளது.
தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு "இளம்படைப்பாளர் விருது' வழங்கவும், அவர்களின சிந்தனைத் திறன், பேச்சாற்றல், எழுத்தாற்றலை ஊக்குவிக்கவும் வேலூர் மாவட்ட நூலகத் துறை சார்பில் இப்போட்டிகள் நடைபெறுகிறது. மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் இப்போட்டிகள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 முதல்
12-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.
கட்டுரை, கவிதைப் போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கப்படும். "வாசித்தேன் வளர்ந்தேன்' என்ற தலைப்பில் 6 பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். கவிதைப் போட்டிக்கு, "என் எதிர்காலம் என் கையில்' என்ற தலைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு போட்டிகளும் ஒன்றரை மணி நேரம் நடத்தப்படும்.
பேச்சுப் போட்டி மதியம் 3 மணிக்கு நடைபெறும். வாழ்விற்கு உயர்வு தருவது வாசிப்பே என்ற தலைப்பில் 7 நிமிடங்கள் பேச வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் புதன்கிழமை மாலை
5 மணிக்குள் பதிவு செய்திட வேண்டும். போட்டியன்று தங்கள் பள்ளித் தலைமையாசிரியரிடம் இருந்து அனுமதிக் கடிதம் பெற்று வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 80154 06975 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவல் மாவட்ட மைய முதல்நிலை கு.இரா.பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.