வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் எல்.இ.டி. பல்பு வாங்கியதில் ரூ. 10 லட்சம் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக அதிமுக முன்னாள் தலைவர், அவரது கணவர் உள்பட 3 பேர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை வட்டார வளர்ச்சி அலுவலராக ரவி பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலத்தில் கீழ்மொணவூர், அன்பூண்டி, மேல்மொணவூர், பூதூர், கருகம்புத்தூர் ஆகிய 5 கிராமங்களில் ரூ. 10 லட்சம் மதிப்பில் 146 எல்.இ.டி பல்புகள் பொருத்தப்பட்டதாக போலியாக ரசீது தயாரித்து வங்கிக் கணக்கில் இருந்து 2 முறை ரூ. 9 லட்சத்து 53 ஆயிரத்து 900 எடுத்துள்ளனர்.
இந்த முறைகேடு குறித்து வேலூர் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, வேலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, இடமாற்றம் செய்யப்பட்டு, திருப்பத்தூர் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த நிலையில் அவரது பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டு துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது, வேலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய மோகன், ஓய்வு பெறும் நிலையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அப்போது வேலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த ரஞ்சிதா, அவரது கணவர் ஆனந்தராஜ், ஆற்காடு சாலையில் உள்ள எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ஆகியோருக்கும் 5 ஊராட்சிகளில் 146 எல்.இ.டி. பல்புகள் நிறுவியதாக போலி ரசீது தயாரித்து மேற்கொள்ளப்பட்டுள்ள முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் 8 பிரிவுகளின் கீழ் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.