விவசாயி கொலை வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு ஆயுள்

திருப்பத்தூரில் விவசாயி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவருக்கு திருப்பத்தூர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. 
Published on
Updated on
1 min read

திருப்பத்தூரில் விவசாயி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவருக்கு திருப்பத்தூர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. 
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40). விவசாயி. இந்நிலையில், கடந்த 18 -7 -2012 அன்று அப்பகுதியில் நடந்த சவ ஊர்வலத்தில் முருகனும், அதே பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலன் (28 ), அவரது சகோதரர் முரளி ( 24 ) ஆகிய இருவரும்  நடனமாடினர். அப்போது முருகன் நடனம் ஆடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். இதில், அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், மறுநாளான 19-ஆம் தேதி வெங்களாபுரத்தில் சிங்காரவேலனும், அவரது தம்பி முரளியும் முருகனை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 
இவ்வழக்கில் நீதிபதி இந்திராணி, கொலையாளிகள் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும், மேலும் சுற்றி இருந்த மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து, திருப்பத்தூர் கிராமிய போலீஸார் இருவரையும் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.