குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் தமிழ் இலக்கிய மன்றப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் எம். ஜெயஸ்ரீராணி தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ஜா. ஜெயக்குமார் வரவேற்றார்.
கல்லூரி மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், இயக்குநர் த.கஜபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர், பேராசிரியர் ப. சிவராஜி, செம்மொழி அறிவோம் என்ற தலைப்பில் பேசுகையில், செம்மொழி இலக்கியங்களில் தொல்காப்பியம், பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் களவியலுரை, முத்தொள்ளாயிரம் முதலான 41 இலக்கியங்களே தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க காரணம் எனவும், கிடைக்கப் பெறும் இந்த இலக்கியங்களையாவது தமிழர்கள் முற்றும் ஓதியுணர்ந்து செம்மொழித் தமிழின் பெருமையை நிலைக்கச் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
இதில் பேராசிரியர்கள் ரா.சே.பாலாஜி, வெ.வளர்மதி, மு.ராதா, வெ.ரமேஷ், ரா.சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியை வே.சரளா நன்றி கூறினார்.