ஏலகிரி கோடை விழா: சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படுமா?

ஏலகிரி கோடை விழா மே மாதம் 3-ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது. விழாவுக்கு வருகை தரும் மக்களுக்கு போதிய வசதிகளை

ஏலகிரி கோடை விழா மே மாதம் 3-ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது. விழாவுக்கு வருகை தரும் மக்களுக்கு போதிய வசதிகளை செய்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் கோடை வாசஸ்தலமான ஏலகிரியில், ஆண்டுதோறும் கோடை விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏலகிரி கோடை விழா மே மாதம் 3-ஆவது வாரத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், வழக்கம்போல் கோடை விடுமுறை முடியும் தருவாயிலேயே கோடை விழா நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கோடை விடுமுறையில் அறிவித்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புகள்:  மாவட்டத்தில் புகழ்பெற்ற இந்த விழாவுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்க மலை அடிவாரத்தில் நிழற்கூடம் இல்லை. வெயில், மழை இருப்பினும் சாலை ஓரத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கென தனிக் கவனம் செலுத்தி தாற்காலிக நிழற்கூடமாவது அமைக்க வேண்டும்.
கோடை விழாவின்போது, வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் ஆங்காங்கே குடிநீர் பந்தல்களை அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
பயணிகளுக்காக தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால் பயணிகள் சிரமத்துள்ளாகின்றனர். எனவே, கழிப்பறைகளை பராமரிக்க கூடுதல் ஆள்களை நியமிக்க வேண்டும்.
கூடுதல் பேருந்துகள்: கோடை விழா ஏற்பாடு குறித்த கூட்டத்தில் 75 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப் 
பட்டுள்ளது. 
மாவட்டம் முழுவதிலிருந்தும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளில் மக்கள் வந்து செல்ல மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, பேருந்துகளை அதிகரித்தால், அதிகமானோர் வந்து செல்ல வசதியாக இருக்கும். ஏலகிரியில் அரசு மதுக் கடை உள்ளது. இந்நிலையில், கோடை விழாவுக்கு வரும் பயணிகள், மது அருந்துவோரால் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. 
எனவே, கோடை விழா நடைபெறும் இரு நாள்களும் அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அளித்து, பயணிகளுக்கு பாதுகாப்பு 
அளிக்கவேண்டும் என்பது பொதுமக்கள் உள்பட அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், மதுப் பிரியர்கள் மது பானங்களை மலை அடிவாரத்திலிருந்து மலைக்குக் கொண்டு செல்கின்றனர். அதைத் தடுக்க கூடுதல் காவலர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். கோடை விழாவுக்கு வரும் பயணிகள் எவ்வித சிரமுமின்றி செல்ல ஏதுவாக உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com