கல்வி உதவித் தொகை கிடைக்கவில்லை: குறைதீர் கூட்டத்தில் மாணவர்கள் புகார்  

பிளஸ் 2 முடித்து 2 வருடங்களாகியும் கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் ஊசூர் அரசுப் பள்ளி மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.  

பிளஸ் 2 முடித்து 2 வருடங்களாகியும் கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் ஊசூர் அரசுப் பள்ளி மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.  
 வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில், ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அளித்த மனுவில், எங்கள் பள்ளியில் 2015-16-ஆம் ஆண்டு 120 மாணவர்கள் பிளஸ் 2 முடித்தோம். எனினும், இப்பள்ளி மாணவர்களுக்கு இதுவரை கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. அதேசமயம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை கிடைக்காததால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாணவர்களின் நலன்கருதி உதவித்தொகையை விரைவில் கிடைக்கச் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அரியூர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த குடும்பங்களை 49-ஆவது வார்டில் சேர்க்க உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு 48-ஆவது வார்டு மக்களை 49 வார்டில் சேர்க்கும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் வாக்களிக்க மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே, இப்பகுதி மக்களை வார்டு மாற்றுவதை கைவிட்டு, பழையபடி 48-ஆவது வார்டிலேயே தொடரச் செய்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அளித்த மனுவில், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் 18 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோ நிறுத்துமிடம் வைத்துள்ளோம். இதுவரை சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இன்றி ஆட்டோக்களை இயக்கி வருகிறோம். ஆனால், கடந்த சில மாதங்களாக வேறு ஒரு தொழிற்சங்கத்தினர் எங்கள் இடத்துக்கு வந்து தொழில் செய்யவிடாமல் பிரச்னை செய்து வருகின்றனர். இதன் காரணமாக எங்களால் தொழில் செய்ய இயலவில்லை. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வீட்டுமனைப்பட்டா, மின் இணைப்பு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 300 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின்மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் கஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com