பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கம்: வாக்குச்சாவடி முகவர்கள் குற்றச்சாட்டு

இறந்ததாகக் கருதி வாக்காளர்கள் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக வாக்குச் சாவடி முகவர்கள்


இறந்ததாகக் கருதி வாக்காளர்கள் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக வாக்குச் சாவடி முகவர்கள் குற்றம்சாட்டினர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக கட்பாடி தொகுதிக்கு உள்பட்ட முகவர், தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வேலூர் சார்-ஆட்சியர் கே.மெஹராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி முதலாவது மண்டல உதவி ஆணையர் மதிவாணன், வட்டாட்சியர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.
அப்போது, மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் முன்னறிவிப்பின்றி 120 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், இறந்து விட்டதாகக் கூறி நீக்கப்பட்ட பலரும் அங்கேயே வசித்து வருகின்றனர். தவறுதலாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பெயர் சேர்த்தல், திருத்ததல் முகாம் நடத்துகின்றனர். இதேபோல், இறந்தவரின் பெயர்களை நீக்க வார்டு அளவில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு வார்டு வரையறை செய்வதாக தெரிவித்து பிரிவித்துள்ளனர். இதில், ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் வெவ்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் நிலை உள்ளது. ஒரே குடும்பத்தினர் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பின்னர், சார்-ஆட்சியர் மெஹராஜ் கூறியது:
வாக்காளர் பட்டியலில் இறந்ததாகக் கருதி பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக வரும் புதன்கிழமைக்குள் (டிச.12) எழுத்துப் பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின் செல்லிடப்பேசி எண்ணையும் அதில் இணைக்க வேண்டும். அவற்றை பரிசீலனை செய்து தகுதியான நபர்களின் பெயர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இறந்தவர்களின் பெயர்களை நீக்க வார்டு அளவில் கூட்டம் நடத்தும் கருத்தை ஏற்கிறோம். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல் வார்டு வரையறை என்பது வேறு. உள்ளாட்சித் தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது நடைபெறுவது மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடாகும் என்றார்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் பங்கேற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன் பேசியது:
அரக்கோணம் சட்டப் பேரவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் சேர்தல், நீக்கல், திருத்தம் கோருதல் கோரி இதுவரை 9,924 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூவர் அரக்கோணம் தொகுதியில் வாக்களிப்பதற்கு அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். 5,824 மனுக்கள் பெயர் சேர்த்தலுக்கும், 2,898 மனுக்கள் பெயர் நீக்குதலுக்கும் வந்துள்ளன.
வரும் தேர்தலுக்காக வாக்குச் சாவடி நிலை முகவர்களை நியமிக்க அந்தந்த அரசியல் கட்சிகள் சார்பில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நபரின் பெயரை தேர்தல் பிரிவில் அளிக்க வேண்டும். அந்த நபர் மட்டுமே வாக்குச் சாவடி நிலை முகவர்களை நியமிக்க முடியும். அவரால் நியமிக்கப்படும் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் அளிக்கும் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவை பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதுகுறித்த தவறான தகவல் அளித்தால் தகவல் அளிப்பவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும். தேர்தலின்போது அந்த நபரிடம் மட்டுமே வாக்குச் சாவடி வாக்காளர் பட்டியல் அளிக்கப்படும் என்றார்.
கூட்டத்துக்கு, வட்டாட்சியர் ஆர்.பாபு தலைமை வகித்தார். இதில் துணை வட்டாட்சியர் (தேர்தல்) உஷாராணி, அதிமுக நகரச் செயலர் கே.பி.பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர் பிரகாஷ், திமுக நகரச் செயலர் வி.எல்.ஜோதி, காங்கிரஸ் நகரத் தலைவர் துரைசீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆம்பூரில்...
ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவர்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், மண்டல அலுவலரான பேபி இந்திரா தலைமை வகித்தார்.
ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முரளிகுமார், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பாக்கியலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வாக்குச் சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com