Enable Javscript for better performance
அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக்க வேண்டும்: அமைச்சர் வீரமணி- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக்க வேண்டும்: அமைச்சர் வீரமணி

    By DIN  |   Published on : 09th February 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த பாடுபட வேண்டும் என்று வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி.வீரமணி பேசினார்.
    வாணியம்பாடியில் வேலூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாள் விழா குறித்தும், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்பப் படிவங்கள் வழங்குவது குறித்தம் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கைப் படிவங்களை வழங்கி அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:
    முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கி, அதில் 18 லட்சம் கட்சி உறுப்பினர்களைச் சேர்த்தப் பின்னர் ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். இதையடுத்து ஜெயலலிதா தனது செயல்திறனால் ஒன்றரை கோடி உறுப்பினர்களாகவும், இந்தியாவில் பாஜக, காங்கிரஸை அடுத்து
    3-ஆவது பெரிய கட்சியாகவும் அதிமுகவை உருவாக்கினார். அவர்களின் வழியில் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும். விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுள்ள நகர, ஒன்றியச் செயலாளர்கள் அனைத்து ஊராட்சிகளுக்கு நேரில் சென்று புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், பழைய உறுப்பினர்களை புதுப்பித்து பதிவு செய்யவும் வேண்டும்.
    வேலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவை தொகுதிகளிலும் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் இருக்க செய்ய வேண்டும். அதிமுகவை பிளவுபடுத்தி கைப்பற்ற நினைப்பவர்களின் எண்ணம் என்றும் பலிக்காது என்றார் அவர்.
    இதைத் தொடர்ந்து, மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் பேசியதாவது:
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அதிமுகவில் புதிய உறுப்பினர்களை அதிகளவு சேர்க்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவு வெற்றி பெறுவதற்காக கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் பாடுபட வேண்டும் என்றார் அவர்.
    கூட்டத்துக்கு, வேலூர் மேற்கு மாவட்ட அவை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் கோவி.சம்பத்குமார், கே.ஜி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ஜி.சதாசிவம் வரவேற்றார்.
    நகரச் செயலாளர்கள் டி.டி.குமார் (திருப்பத்தூர்), மதியழகன் (ஆம்பூர்), என்.பழனி (குடியாத்தம்), ஒன்றியச் செயலாளர்கள் செல்வம் (திருப்பத்தூர்), எம்.கே.ராஜா (நாட்டறம்பள்ளி), ஜோதிராமலிங்கராஜா (மாதனூர்), வெங்கடேசன் (பேர்ணாம்பட்டு), பேருராட்சி செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai