Enable Javscript for better performance
அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இயக்கப்படாத: சென்னை-பெங்களூரு விரைவு ரயில்- Dinamani

சுடச்சுட

    

    அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இயக்கப்படாத: சென்னை-பெங்களூரு விரைவு ரயில்

    By DIN  |   Published on : 09th February 2018 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை-பெங்களூரு பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 2015-16 கால அட்டவணையிலேயே அறிவிக்கப்பட்ட சென்னை-பெங்களூரு விரைவு இதுவரை இயக்கப்படாதது பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தெற்கு ரயில்வேயிலேயே மிகவும் அதிக வருமானமுள்ள வழித்தடம் சென்னை-பெங்களூரு வழித்தடம் தான். இத்தடத்தில் தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் என மொத்தம் 42 விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிக ரயில்கள் இயக்கப்பட்டும் இந்த வழித்தடத்தில் எப்போதுமே எந்த ரயில்களிலும் இடம் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, சென்னை-பெங்களூரு மெயில் முன்பதிவு தொடங்கும் நாளன்றே நிரம்பி விடுவதால் எப்போது கேட்டாலும் இடம் இல்லை என்ற பதில் மட்டும் தான் கிடைக்கும் என பயணிகள் கூறுகின்றனர்.
    இதில், பகல் நேரத்தில் மைசூர் சதாப்தி, பெங்களூரு சதாப்தி, பிருந்தாவன், டபுள்டக்கர், லால்பார்க் எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த ரயில்களில் முன்பதிவும் கேட்ட தேதியில் கிடைப்பதில்லை. இதனாலேயே இம்மார்க்கத்தில் பயணம் செய்யும் பயணிகள், நீண்ட நாளாக பகல் நேரத்தில் கூடுதலாக ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் எழுப்பினர்.
    இதுதொடர்பாக அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் நைனா மாசிலாமணி, செயலர் ரகுநாதன் உள்ளிட்டோர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் முதல் ரயில்வே வாரிய தலைவர், உறுப்பினர், ரயில்வே அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் தொடர்ந்து பலமுறை தங்களது மனுக்களை அனுப்பி வந்தனர்.
    இதைத் தொடர்ந்து, கடந்த 2014-15-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் சென்னை-பெங்களூரு இடையே பகலில் கூடுதலாக எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.
    இதையடுத்து இந்த புதிய ரயிலுக்காக நேரங்கள் அறிவிக்கப்பட்டு அந்த ஆண்டு கால அட்டவனையும் வெளியிடப்பட்டது. 12795 என்ற எண் கொண்ட ரயில் சென்னையில் இருந்து காலை 10.30-க்குப் புறப்பட்டு பெங்களூருவை மாலை 4.40-க்கு அடையும் எனவும், மறு மார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து காலை 8.45-க்குப் புறப்பட்டு மாலை 3.45-க்கு சென்னை சென்ட்ரலை அடையும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
    இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காரபேட்டை, ஒயிட்பீல்ட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கண்டோண்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதே அட்டவனையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
    இந்த அறிவிப்புகள் வெளிவந்து 3 ஆண்டுகளாகியும் சென்னை-பெங்களூரு விரைவு ரயில் இதுவரை அறிமுகப்படுத்தப்படவே இல்லை. இதனால் மற்ற ரயில்களில் வாரத்தின் 7 நாள்களும் சென்னை-பெங்களூரு மார்க்கத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
    எனவே, அறிவிக்கப்பட்டு இன்னும் இயக்கப்படாத பெங்களூரு விரைவு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பயணிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai