Enable Javscript for better performance
ஆந்திரத்தில் பந்த்: தமிழகப் பேருந்துகள் வேலூரில் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்தில் பந்த்: தமிழகப் பேருந்துகள் வேலூரில் நிறுத்தம்

    By DIN  |   Published on : 09th February 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய நிதிநிலை அறிக்கையில் ஆந்திரத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படாததைக் கண்டித்து அம்மாநிலத்தில் வியாழக்கிழமை முழுஅடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து ஆந்திரத்துக்குச் செல்லக்கூடிய அரசு, தனியார் பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் வேலூர், காட்பாடியிலேயே நிறுத்தப்பட்டன.
    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆந்திரத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் ஆந்திரத்துக்குத் தேவையான அளவு நிதியை மத்திய அரசு ஒதுக்காததைக் கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தின. இதனால், அந்த மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. இந்த முழுஅடைப்புப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் தமிழக அரசு, தனியார் பேருந்துகள் அனைத்தும் எல்லைப்பகுதியான வேலூர் பேருந்து நிலையத்திலும், காட்பாடியிலும் நிறுத்தப்பட்டன. இதேபோல், அந்த மாநிலத்தல் இருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், திருப்பதி பக்தர்கள், தொழில் நிமித்தமாகவும், உயர்கல்விக்காகவும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்றுவரக் கூடிய வணிகர்கள், தொழில்முனைவோர், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். இதேபோல், சரக்கு வாகனங்களும் வேலூர், காட்பாடி பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.
    முழுஅடைப்புப் போராட்டம் மாலை 5 மணிக்கு கைவிடப்பட்டதற்குப் பிறகு பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai