Enable Javscript for better performance
கோடைக்கு முன்னே குவியும் தர்பூசணி பழங்கள்..!- Dinamani

சுடச்சுட

    

    கோடை காலம் வருவதற்கு முன்னே அரக்கோணம் நகரில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.
    அரக்கோணம் உள்ளிட்ட வேலூர் மாவட்டப் பகுதிகளில் கோடை காலங்களில் தர்பூசணி பழங்களின் விற்பனை அதிகளவில் இருக்கும். கர்நாடகம் மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்து இம்மாவட்டத்துக்கு தர்பூசணி பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வரும். மேலும், அரக்கோணம், நெமிலி வட்டங்களில் விளையும் தர்பூசணிகள் ஏப்ரல் மாதத்துக்கு மேல் விற்பனைக்கு வருவது வழக்கம். இதில் முழுவதும் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில தர்பூசணிகளை மக்கள் விரும்பி உண்பர். தமிழகத்து தர்பூசணிகள் வெளிர்பச்சை நிறத்தில் கரும்பச்சையில் கோடு போட்டது போல் இருக்கும்.
    அரக்கோணம் நெமிலி மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளான திருத்தணி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் இவ்வருடம் தர்பூசணி அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகம், ஆந்திர மாநில தர்பூசணிகளின் வருகைக்கு முன்பே தமிழகத்து தர்பூசணிகள் விற்பனைக்கு வந்துவிட்டன.
    லாரிகளில் இப்பழங்களை எடுத்து வரும் வியாபாரிகள் சாலையோரங்களில் வைத்து வியாபாரம் செய்கின்றனர். ஒரு பழம் ரூ. 50 முதல் ரூ. 200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், இவ்வருடம் தர்பூசணி பழங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. எனவே வரும் நாள்களில் இப்பழங்களின் வரத்து அதிகரித்து விலை குறைவாக இருக்கும். மேலும், இவ்வருடம் தண்ணீர் அதிகளவில் இருந்ததால் பழங்கள் நன்றாக செழிப்பாக பெரியதாக உள்ளன. சுவையும் அருமையாக உள்ளது. வாங்கி உண்போர் அனைவரும் மறுபடியும் வாங்க வருகின்றனர் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai