சுடச்சுட

  
  sand

  பேர்ணாம்பட்டு ஒன்றியம் பாலூர் அருகே மூலக்கொல்லை பகுதியில் கானாற்றில் மணல் திருடப்பட்ட வனப்பகுதி.

  ஆம்பூர் அருகே காப்புக் காடுகளில் தொடரும் மணல் கொள்ளையைத் தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  ஆம்பூர் வனச்சரக காப்புக்காடுகள் மேற்கே மாதகடப்பா மலை தொடங்கி, பேர்ணாம்பட்டு அருகே உள்ள சாரங்கல் வரையும், கிழக்கே வாணியம்பாடி அருகே நெக்னாமலை தொடங்கி மாதனூர் தோட்டாளம் வரையும், வடக்கே பல்லலக்குப்பம் தொடங்கி அழிஞ்சிக்குப்பம் வரையும் பரந்து விரிந்து உள்ளன.
  மேற்கே உள்ள காரப்பட்டு காப்புக்காடுகளில் மாதகடப்பா காட்டாறு, முனியப்பன் ஏரி கானாறு, தேவுடு கானாறு, தொம்மக்கல் கானாறுகளும், மிட்டாளம் துருகம் காப்புக்காடுகளில் பொன்னப்பல்லி ஊறல்குட்டை கானாறு, ராள்ளக்கொத்தூர் கம்மாளன் கிணறு கானாறு, மிட்டாளம் சாணி கணவாய் கானாறு, பைரப்பள்ளி ஊட்டல் கானாறு, கொச்சேரி கானாறு, குட்டகிந்தூர் துருஞ்சித்தளை மேடு கானாறு, சின்னவரிகம் பெங்களமூலை கானாறு, சாரங்கல் பெருங்கானாறு என பல்வேறு கானாறுகள் ஓடுகின்றன. அதேபோல் கிழக்கு பகுதியில் விண்ணமங்கலம் காப்புக்காடுகளில் வெள்ளக்கல் கானாறு, நாச்சார்குப்பம் கானாறு, காமனூர் தட்டு கானாறு, நாய்க்கனேரி ஆனைமடுவு கானாறுகளும், வடப்புதுப்பட்டு காப்புக்காடுகளில் மூலைக்கொல்லை கானாறு, குளிதிகை ஜமீன் கானாறுகளும், வடக்கே மலட்டாறு மற்றும் கொட்டாறுகளும் காப்புக்காடுகளின் வழியாக ஓடுகின்றன.
  இந்தக் கானாறுகள் மற்றும் ஓடைகளில் மழை காலங்களில் வெள்ளம் வரும்போது தூய்மையான மணற்பரப்பு திட்டு திட்டாக உருவாகிறது. 
  இவ்வாறு உருவாகும் மணலுக்கு கட்டுமானத் தொழில் செய்வோர் மத்தியில் மவுசும் அதிகம், விலையும் அதிகம். பாலாற்றில் தோல் தொழிற்சாலை மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள், நகராட்சி கழிவுநீர் கலப்பதாலும் அது உப்புத்தன்மை மிகுந்து காணப்படுவதாலும் கட்டடங்களின் உறுதி தன்மைக்கு பாலாற்று மணலை கட்டுமான தொழிலாளர்கள் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பாலாற்று மணலை புறக்கணிப்போர் காடுகளில் இருக்கும் கானாறு மணலுக்கு முக்கியத்துவம் அளித்து அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.
  காப்புக்காடுகளில் உள்ள கானாற்று மணலை டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று வருவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. மேலும், காப்புக்காடு கானாறுகளில் இருந்து அள்ளப்படும் மணலை மறைவிடங்களில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைத்து லாரிகள் மூலம் அண்டை மாநிலங்களில் அதிக விலைக்கு கடத்துவதாகக் கூறப்படுகிறது.
  எனவே, வனத்துறையினர் ரோந்து சென்று மணல் கடத்தலைத் தடுத்து, மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai