Enable Javscript for better performance
அனைத்து மாவட்டங்களிலும் ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து மாவட்டங்களிலும் ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

    By DIN  |   Published on : 16th June 2018 11:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையமும், நடமாடும் நூலகமும் விரைவில் அமைக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
     வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் குடும்ப பொருளாதார நிலை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி படிக்க விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதனை தலைவராகக் கொண்டு செயல்படும் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், கடந்த 6 ஆண்டுகளில் 3,911 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.74 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
    இவ்வாண்டுக்கான இரண்டாம் கட்ட கல்வி உதவித் தொகை வழங்கும் விழா விஐடியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று, 1,294  மாணவ, மாணவிகளுக்கு ரூ. 80 லட்சம் கல்வி உதவித் தொகையை வழங்கிப் பேசியதாவது: அறக்கட்டளையின் இந்தப் பணிகளுக்கு  தமிழக அரசு சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
    உயர்கல்வியைப் பொருத்தவரை தமிழகம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 27  சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் அதன்அளவு 44.3 சதவீதமாக இருந்தது. தற்போது 47.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு கல்விக் கூடம்  திறப்பது
    ஆயிரம் சிறைச்சாலைகளை மூடுவதற்கு சமம் ஆகும். தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரம் உயர ஆசிரியர்களுக்கு பயிற்சி  அளிக்கப்பட உள்ளது. சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட்  தேர்வில் பங்கேற்க 412 மையங்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு குறைந்தது  ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வகையில் பயிற்சி வழங்கப்படும்.
     மேலும், மாவட்டந்தோறும் குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையமும், நடமாடும் நூலகமும் விரைவில் அமைக்கப்பட உள்ளன. தவிர, பிளஸ் 2 முடித்தாலேயே வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலையை ஏற்படுத்திட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
    முன்னதாக, அறக்கட்டளைத் தலைவரும் விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது:
    நாட்டில் கல்வி வளர்ந்தால் தான் அந்த நாடு வளர்ந்த நாடாக விளங்க முடியும். ஆனால், நம்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 2.5% சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பயிலும் நிலை உள்ளது. இது அமெரிக்காவில் 60 சதவீதமாக உள்ளது.
    அந்நாட்டைப் போல நாமும் உயர முடியும். இதற்கு உயர்கல்வி படிக்க தகுதியுள்ளஅனைவருக்கும் உயர்கல்வி வழங்கப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டே அனைவருக்கும் உயிர்கல்வி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. இந்த அறக்கட்டளை சார்பில் இதுவரை 4,158 மாணவ, மாணவியருக்கு ரூ. 5 கோடி அளவுக்கு உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு உதவ அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.
    தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயர வேண்டும் என்றால், அதற்கு அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அத்துடன், கல்வியின் தரம் உயர ஆசிரியர் பணியிடத்துக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிப்பதுடன், பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு கடுமையான பயிற்சிகளையும் அளித்திட வேண்டும் என்றார் அவர்.
    அறக்கட்டளை உறுப்பினர் புலவர் வே.பதுமனார் வரவேற்றார். தமிழக வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலை வகித்தார். விஐடி துணைத் தலைவர்கள் ஜி.வி.செல்வம் (வேலூர் வளாகம்), சங்கர் விசுவநாதன் (சென்னை வளாகம்),  அறக்கட்டளை உறுப்பினர்கள் கே.ஜவுரிலால், மயிலாம்பிகை குமரகுரு, ஜெ.லட்சுமணன், எம்.வெங்கட சுப்பு, கே.எம்.தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறக்கட்டளை திட்ட இயக்குநர் ஆர்.முத்துவீரன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai