Enable Javscript for better performance
குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    


    வேலூரை அடுத்த ஒடுகத்தூரில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில்
    ஈடுபட்டனர்.
    வேலூரை அடுத்த ஒடுகத்தூர் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் மின்இணைப்பு துண்டிப்பு, மோட்டார் பழுது காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதனால், பொதுமக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
    இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை காலை குருவராஜபாளையம் - ஆசனாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வேப்பங்குப்பம் போலீஸார் விரைந்து வந்து சமரசப் பேச்சு நடத்தினர்.
    மேலும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆம்பூரில்...
     மாதனூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மாதனூர் ஊராட்சி ஒன்றியம், மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் குருவராஜபாளையம்-ஆசனாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  
    தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸார் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கூறினர்.
    குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai