Enable Javscript for better performance
ரமலான் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை- Dinamani

சுடச்சுட

    

    ரமலான் பண்டிகையை யொட்டி, வேலூர் மாவட்டத்தில் உள்ள மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர்.
    இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் புனித ரமலான் நோன்பு கடைப்பிடிப்பது முக்கியமானதாகும். இந்த ஆண்டு கடந்த மே 17-ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்கியதை அடுத்து, இஸ்லாமியர்கள் நோன்பு இருக்கத் தொடங்கினர். தொடர்ந்து, 30 நாள்கள் நோன்பு இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பிறை தெரிந்ததை அடுத்து சனிக்கிழமை ரமலான் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூர் மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை கோலாகலமா கொண்டாடினர்.
    வேலூர் ஆர்.என்.பாளையம் பெரிய மசூதி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சனிக்கிழமை காலை ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல், காந்தி சாலை, மெயின் பஜார், சைதாப்பேட்டை, பெரிய மசூதி, பிடிசி மேட்டு மசூதி, சின்ன மசூதி, கொணவட்டம், சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் உள்ள மசூதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல், வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். பின்னர், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் தழுவிக் கொண்டு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
    இதையடுத்து இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்தும், பிரியாணி உள்ளிட்ட விருந்துகளை சுவைத்தும் ரமலானை கோலாகலமாகக் கொண்டாடினர். பல இடங்களில் இஸ்லாமிய சிறுவர்கள் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ந்தனர். ரம்ஜானையொட்டி மாவட்டம் முழுவதும் தொழுகை நடைபெற்ற மசூதிகள், மைதானங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    ஆம்பூரில்...
    ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் 40 ஆயிரம் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
    ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஆம்பூர் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 இடங்களில் ரமலான் சிறப்பு கூட்டு தொழுகை நடைபெற்றது.  
    சிறப்பு தொழுகையில் ஷபிக் ஷமில் குழுமத் தலைவர் என். முஹம்மத் சயீத், பரிதா குழுமத் தலைவர் மெக்கா ரபீக் அஹமத், என்.எம்.இசட் குழுமத் தலைவர் என். முஹம்மத் ஜக்கரியா,  ஆம்பூர் காஜி கதீப் ஷஹாபுதீன், முன்னாள் எம்எல்ஏ அ.அஸ்லம்பாஷா, தோல் தொழிற்சாலையின் மேலாளர்கள் பிர்தோஸ்
    கே.அகமது, தமீம்அகமது, முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் கே. நஜர்முஹம்மத், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்
    கே.என். அமீன் பாஷா, தமுமுக மாவட்டத் தலைவர் வி.ஆர். நசீர் அஹமத், மஜ்ஹருல் உலூம் கல்லூரி முதல்வர் ஆதில்அஹமத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்.  ரமலான்  பண்டிகையை முன்னிட்டு, ஆம்பூர் டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையில்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    வாணியம்பாடியில்...
    வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர், வளையாம்பட்டு, நேதாஜிநகர், ஜாப்ராபாத் ஆகிய ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். வாணியம்பாடி பெரியப்பேட்டை மசூதியில் பெண்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
     வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்க நிர்வாகி மருத்துவர் அன்வருல்லா, வாணிடெக் நிர்வாக இயக்குநர் இக்பால்அகமது, முன்னாள் இயக்குநர் பட்டேல்முகமதுயூசுப், நகர மதிமுக செயலாளர் அ.நாசீர்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் நிசார் அகமது, சையத்  நிசார் அகமது,  காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா, முஸ்லிம் கல்விச் சங்க பொதுச் செயலாளர் சுனாகைசர் அஹமத், வாணிடெக் மேலாளர் அப்துல்லா, இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி முதல்வர் டி.முகமது இலியாஸ், உதயேந்திரம் பேரூர் திமுக அவைத் தலைவரும், முத்தவல்லியுமான ஜான் பாஷா, பி.எம்.டி இக்பால் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
    இதேபோல் ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, ஜாப்ராபாத், உதயேந்திரம் ஆகிய  பகுதிகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையையொட்டி  சிறப்பு தொழுகை நடத்தினர்.
    ஆற்காட்டில்...
    ஆற்காடு நகரில் வேலூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் மேல்விஷாரம், கலவை, திமிரி உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
    திருப்பத்தூரில்...
    திருப்பத்தூரில் ரயில்வே சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் 9 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு சொற்பொழிவும், சிறப்புத் தொழுகையும் நடைபெற்றன. இதில், திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai