Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தல் நடக்காததற்கு திமுகதான் காரணம்: அமைச்சர் கே.சி.வீரமணி- Dinamani

சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தல் நடக்காததற்கு திமுகதான் காரணம்: அமைச்சர் கே.சி.வீரமணி

  By DIN  |   Published on : 24th March 2018 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காததற்கு திமுகதான் காரணம் என்று மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டினார்.
  உழைக்கும் மகளிருக்கு மானிய விலை இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா வேலூர் கோட்டை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  இதில், ரூ. 2.50 கோடி மானியத்தில் ஆயிரம் மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள், 40 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 32 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளையும் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கி சிறப்புரையாற்றினார்.
  நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திமுக தடையாக இல்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுகவுக்குத் தான் எண்ணம் இல்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால், மக்கள்தான் பயனடைந்திருப்பார்கள். ஆனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் நிறுத்தியது திமுகதான். தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் திமுகவினர்தான் நீதிமன்றத்தில் தடை பெற்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தியுள்ளனர். இதனால் தான் தேர்தல் நடத்த முடியாமல் போனது. அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்த எப்போதும் தயாராக உள்ளது.
  இணையவழி (ஆன்லைன்) பத்திரப் பதிவு செய்வதில் தொடக்கத்தில் மென்பொருள் பழுது ஏற்பட்டது. தற்போது அந்த பழுது சரிசெய்யப்பட்டு சீரான முறையில் இயங்கி வருகிறது.
  உச்ச நீதிமன்றம் விசாரித்து வருவதால் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் குறித்து தற்போது கருத்துக் கூற இயலாது. பத்திரப் பதிவுத் துறையில் 33 சதவீத வரியை குறைத்துள்ளோம். எனவே, வரும் நிதியாண்டில் ஏராளமான பத்திரப் பதிவுகள் செய்யப்படும். மானிய விலை இரு சக்கர வாகனங்களைக் கூடுதலாக வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார் அவர்.
  நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சி.விஜயகுமார், முன்னாள் எம்எல்ஏ விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  மாவட்டம் முழுவதும் 36,604 மரக்கன்றுகள் நடவு
  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, வேலூர் மாவட்டம் முழுவதும் 36,604 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இத்திட்டத்தை மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
  ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இத்திட்டத்தை பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கடந்த 24-ஆம் தேதி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் 10 சதவீத மரக்கன்றுகள், அதாவது 7 லட்சம் மரக்கன்றுகள் வனத் துறையின் சார்பில், 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ. 1 கோடியே 3 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் 29 மாவட்டங்களில் உள்ள 13 வனச்சரகங்களில் நடப்பட உள்ளன. அதன் அடிப்படையில், வேலூர் வனச் சரகத்தில் 36,604 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  இதில், அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று மருத்துவமனை வளாகத்தில் முதல்கட்டமாக 106 மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
  தொடர்ந்து, கணியம்பாடி ஊராட்சியில் வாழும் கலை அமைப்பு சார்பில் பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காக அமைக்கப்பட்ட மணிக்கு 250 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
  நிகழ்ச்சிக்கு, வேலூர் மண்டலத் தலைமை வனப் பாதுகாவலர் தின்கர்குமார் தலைமை வகித்தார். ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், எஸ்.பி. பகலவன், கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன், ஆவின் தலைவர் த.வேலழகன் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai