Enable Javscript for better performance
காசோலை மோசடி: மணல் வியாபாரிக்கு 1 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    நாட்டறம்பள்ளியில் காசோலை மோசடி செய்த வழக்கில் மணல் வியாபாரிக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
    வேலூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் ராஜபதி (50). இவர், டிப்பர் லாரிகள் மூலம் மணல் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் டி.சாமுண்டியிடம் (63) வீடு கட்ட மணல் லோடு ஓட்டிய வகையில் நவீன் ராஜபதி அறிமுகமாகியுள்ளார்.
    கடந்த 2015-ஆம் ஆண்டு நவீன் ராஜபதி, நாட்டறம்பள்ளிக்கு வந்து சாமுண்டியிடம் ரூ. 5 லட்சமும், அவர் மூலமாக அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பனிடம் (45) ரூ. 2.50 லட்சமும், சுந்தரத்திடம் ரூ. 2 லட்சமும் கடன் வாங்கியுள்ளார்.
    இதையடுத்து 3 பேரும் கடனை திருப்பிக் கேட்டதற்கு, நவீன் ராஜபதி தனித்தனியாக 3 காசோலைகளை வழங்கியுள்ளார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, நவீன் ராஜபதியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி விட்டன.
    இதனால் ஏமாற்றமடைந்த சாமுண்டி, பழனியப்பன், சுந்தரம் ஆகிய 3 பேரும் திருப்பத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 3-இல் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
    இந்த வழக்குகளை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி பி.சுமிதா, காசோலை மோசடி செய்த நவீன் ராஜபதிக்கு, சாமுண்டி தொடர்ந்த வழக்கில் 6 மாத கால சிறை தண்டனையும், காசோலை தொகையான ரூ. 5 லட்சத்தை திருப்பி செலுத்தவும், மற்ற இரு வழக்குகளிலும் தலா 3 மாத சிறை தண்டனையும், பழனியப்பனுக்கு ரூ. 2.50 லட்சமும், சுந்தரத்துக்கு ரூ. 2 லட்சமும் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai