Enable Javscript for better performance
புறம்போக்கு நிலங்களில் மண் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தக்கோலம் அருகே அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் தொடர்ந்து லாரிகள் மூலம் நடைபெறும் மண் திருட்டால் நீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
    அரக்கோணம் வட்டத்தில் பல இடங்களில் தற்போது ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் எடுக்கப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரக்கோணம் பகுதி சென்னைக்கு அருகே இருப்பதாலும், இங்கிருந்து சென்னைக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலை இல்லாமல், பல கிராமச் சாலைகள் இருப்பதாலும் அவ்வழிகளில் லாரிகள் மூலம் முறைகேடாக மணல் கொண்டு செல்லப்படுகிறது.
    மேலும், செங்கல் சூளைகளுக்காக கிராம ஏரிகளில் இருந்து அரசு அனுமதியின்றி மண் எடுத்துச் செல்வதும் அதிகரித்துள்ளது. இதனால், அரக்கோணம் வட்டத்தில் புதுகேசாவரம், இலுப்பைதண்டலம், அரிகலபாடி, சயனபுரம், செய்யூர், ஆத்தூர், திருமால்பூர், கீழ்வெண்பாக்கம், ஜாகீர்தண்டலம், ஆட்டுபாக்கம், பின்னாவரம், கணபதிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகள், நெமிலி வட்டத்தில் வேட்டாங்குளம், புன்னை, துறையூர், பனப்பாக்கம் ஆகிய கிராம ஏரிகளில் 20 அடிக்கு மேல் ஆழமாக மண் எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
    இதுமட்டுமல்லாமல் கிராமங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு விவசாய மற்றும் தரிசு நிலங்களில் அதிகளவு மண் எடுத்துச் செல்லப்படுகிறது. தக்கோலத்துக்கு அருகில் உள்ள சித்தூர், கணபதிபுரம், முருங்கை, பள்ளூர், திருமால்பூர் ஆகிய இடங்களில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை நாசப்படுத்தி உள்ளனர். இவர்கள் 15 அடிக்கு மேலும் ஆழப்படுத்தி மண்ணை எடுப்பதால் அப்பகுதி நீர்நிலைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    குறிப்பாக முருங்கை, சித்தூர் கிராமப் பகுதிகளில் மண் எடுப்பவர்களை கிராம மக்கள் கேட்டால், மண் எடுக்கும் நபர்கள் அவர்களை மிரட்டுகின்றனர். இதுகுறித்து வருவாய்த் துறை, காவல் துறை, கனிமவளத் துறையினரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் குறைந்தது 10 முதல் 20-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு முறைகேடாக மண் எடுக்கப்படுகிறது.
    இதனால் ஆற்றோரம் உள்ள நிலங்களில் கூட நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. இதேபோல, கிராமத்தில் உள்ள விவசாய மற்றும் குடிநீர்க் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து
    கொண்டே வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
    கடந்த காலங்களில் ஆறுகள், ஏரிகளில் முறைகேடாக மணல் மற்றும் மண் எடுத்து வந்த நிலையில், தற்போது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களிலும் மண் கொள்ளை தொடங்கியுள்ளது.
    எனவே, அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு புறம்போக்கு நிலங்களில் மண் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai