Enable Javscript for better performance
ஏப். 5 முதல் நீட் தேர்வு பயிற்சி: மாவட்டத்தில் 538 மாணவர்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    ஏப். 5 முதல் நீட் தேர்வு பயிற்சி: மாவட்டத்தில் 538 மாணவர்கள் தேர்வு

    By DIN  |   Published on : 31st March 2018 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் முழுவதும் நீட் தேர்வு பயிற்சி ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இப்பயிற்சிக்கு வேலூர் மாவட்டத்தில் 538 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழக முழுவதும் நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி மையங்கள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டன. விடுமுறை நாள்களில் மட்டும் செயல்பட்டு வந்த இப்பயிற்சி மையங்கள், பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியதை அடுத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில், மீண்டும் இப்பயிற்சி வகுப்பு ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    மாவட்ட அளவில் பிளஸ் 2 பாடத்தில் சிறந்த விளங்கும் 100 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு தங்கும் வசதியுடன்கூடிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி முகாம் ஏப்ரல் 5 முதல் 
    மே 5-ஆம் தேதி வரை நடக்கிறது. 
    இதன்படி, நீட் தேர்வு பயிற்சிக்காக வேலூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், பிளஸ் 2 வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 538 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், முதல் 100 மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இலவச உணவு, தங்கும் வசதியுடன் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மற்ற மாணவர்களுக்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 சிறப்புப் பயிற்சி மையங்களில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. 
    இப்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் கடந்த ஆண்டைவிட அதிகளவில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai