Enable Javscript for better performance
கோயில்களில் பங்குனி உத்தர விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்தர விழாவை முன்னிட்டு, 108 பால்குட ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விழாவை முன்னிட்டு, 28-ஆம் தேதி காலை விநாயகர் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பால் குடங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. 
    கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் 108 பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வள்ளி தேவசேனா சமேத பாலமுருகனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. 
    பின்னர், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை  நடைபெற்றது. இதில், திருவலம் சர்வமங்களா பீடாதிபதி சாந்தா சுவாமிகள், ஆற்காடு மகாத்மா காந்தி  முதியோர் இல்லத்தின் தலைவர் ஜெ.லட்சுமணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அரக்கோணத்தில்...
    அரக்கோணத்தை அடுத்த கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜோதீஸ்வரர் ஈஸ்வரி கோயிலில் 9-ஆம் ஆண்டு பங்குனி உத்தர விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
    விழாவில், சோளிங்கர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ என்.ஜி.பார்த்தீபன், அமமுக நகரச் செயலர் கண்ணதாசன், ஒன்றியச் செயலர் துளசிராமன், பொதுக்குழு உறுப்பினர் கன்னியப்பன், மாவட்ட மாணவரணிச் செயலர் எஸ்.டி.யோகானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஆம்பூரில்....
    ஆம்பூர் அருகே பச்சகுப்பம் மயிலாடும் மலை திருமுருகன் கோயிலில் பங்குனி உத்தர விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விழாவையொட்டி, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.  மாலையில் முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருத்தணியில்...
    பங்குனி உத்தரப் பெருவிழாவையொட்டி,திருத்தணி முருகன் கோயிலில்  வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயில் காவடிகள், பால்குடம் எடுத்து மூலவரை வழிபட்டனர்.
     திருத்தணி முருகன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க வேல், தங்கக் கீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 10 மணிக்கு நகரத்தார் திருத்தணி பாத யாத்திரை அறக்கட்டளை சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், மயில் காவடிகள் எடுத்தும், 250 பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்து,  மலையடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து படிகள் வழியாக மலைக்கோயிலுக்கு சென்றனர்.
     பின்னர் காவடி மண்டபத்தில்  உற்சவர் முருகனுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் 250 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. 
    மதியம் ஒரு மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
     பங்குனி உத்தரத்தையொட்டி மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். பொதுவழியில் மூலவரைத் தரிசிக்க 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர்.  பக்தர்களுக்கு வசதியாக மலைக் கோயில் வளாகத்தில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருந்தது. 
    விழாவில் அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் இ.என்.கண்டிகை எ.ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    இதே போல், திருத்தணி சுந்தர விநாயகர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவர் சிவகாமி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா  வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai