Enable Javscript for better performance
தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க கல்வித்துறை உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க கல்வித்துறை உத்தரவு

    By DIN  |   Published on : 31st March 2018 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த நடுநிலைப் பள்ளிகளின் பட்டியலை இடைநிலைக் கல்வி இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
    தமிழகம் முழுவதும் 2018-19-ஆம் கல்வியாண்டில் தகுதியுடைய 100 மாநகராட்சி, ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 
    இதன்படி, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தக் கோரி சம்பந்தப்பட்ட பள்ளிகள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அதற்கான விவரப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, அதன் நகலை உடனடியாக மின்னஞ்சல் மூலமாகவும், குறுந்தகடுகளாகவும் இடைநிலைக் கல்வி இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
    அவ்வாறு தரம் உயர்த்தக் கோரும் பள்ளிகளுக்கு 3 ஏக்கர் இடவசதி இருக்க வேண்டும். பொதுமக்கள் பங்குத் தொகையாக ரூ. 1 லட்சம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். தரம் உயர்த்தும் போது தருவதாகக் கூறும் உறுதியை ஏற்கக் கூடாது. 
    ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் பள்ளிகள், மலைவாழ் மக்கள், பெண்கள் அதிகளவில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 
    தரம் உயர்த்தக் கோரும் பள்ளிகளில் போதிய வகுப்பறைகளுடன் கூடிய கட்டட வசதி, மாணவ, மாணவிகளுக்கான குடிநீர், தனித்தனி கழிப்பறை வசதி இருக்க வேண்டும்.
    மேலும், அப்பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் மட்டும் 50 மாணவ, மாணவிகள் இருக்க வேண்டும். தரம் உயர்த்தக் கோரும் நடுநிலைப் பள்ளிக்கு 5 கி.மீ. சுற்றளவில் ஏற்கெனவே உயர்நிலைப் பள்ளிகள் இருந்தால் அப்பள்ளியின் பெயர், எத்தனை கி.மீ. தொலைவில் உள்ளது என்பன போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். 
    போதிய மருத்துவ வசதி இல்லாத பகுதிகள், இயற்கை தடையுள்ள பகுதிகள், மலைப்பகுதிகளில் உள்ள நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தவும், மாணவிகள் அதிகம் படிக்கும் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவும் வேண்டும். 
    இத்தகைய விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரிடம் உறுதி செய்து அனுப்ப வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai