சுடச்சுட

  

  இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயற்சி: மாணவர் கைது  

  By DIN  |   Published on : 01st May 2018 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூரில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை மக்கள் நடமாட்டம் உள்ள சாலையிலேயே கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற முதுகலை பட்டதாரி மாணவரை போலீஸார் கைது செய்தனர். 
  காட்பாடியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், பி.காம். படித்துவிட்டு ஆற்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் ஒரே கல்லூரியில் படித்தவர் காட்பாடி எம்.ஜி.ஆர்.
  நகரைச் சேர்ந்த ஷபீர்(23). தற்போது எம்.பி.ஏ. படித்து வரும் இவர், அந்த இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி தொல்லை அளித்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் ஷபீரின் காதலை அந்த பெண் ஏற்றுக் கொள்ளவில்லையாம்.
  இதனால், ஆத்திரமடைந்த ஷபீர், அடிக்கடி அப்பெண்ணை வழிமறித்து, மதம் மாறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். 
  இதுதொடர்பாக, அந்தப் பெண் தனது பெற்றோருடன் கடந்த மார்ச் 8-ஆம் தேதி வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குச் சென்று புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
  இந்நிலையில், அந்த இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஷபீர், திடீரென அப்பெண்ணை வழிமறித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வற்புறுத்தியுள்ளார். 
  இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனினும், அப்பெண் தன்னை காதலிக்கவும், திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஷபீர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்றுள்ளார். 
  அப்போது, அப்பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், ஷபீரை துரத்திப் பிடித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அத்துடன் காயமடைந்த இளம்பெண்ணை மீட்டு, வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, ஷபீரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   


  போலீஸாரின் அலட்சியமே காரணம் 
  கழுத்தறுக்கப்பட்ட இளம்பெண், தனக்கு ஏற்பட்டு வரும் பிரச்னைகள் குறித்து தனது பெற்றோருடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மார்ச் 8-ஆம் தேதியே புகார் அளித்துள்ளார். எனினும், இப்புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸாரின் இந்த அலட்சியமே தற்போது அந்த பெண் கழுத்தறுக்கப்பட காரணமாகியுள்ளது. எனவே, இளம்பெண்ணின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணியின் கோட்டத் தலைவர் மகேஷ் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai