Enable Javscript for better performance
ஜப்தி நடவடிக்கை அறிந்து முன்கூட்டியே பூட்டப்பட்ட ஒன்றிய அலுவலகம்- Dinamani

சுடச்சுட

    

    ஜப்தி நடவடிக்கை அறிந்து முன்கூட்டியே பூட்டப்பட்ட ஒன்றிய அலுவலகம்

    By DIN  |   Published on : 18th May 2018 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜப்தி நடவடிக்கையை அறிந்த கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், ஊழியர்களும் முன்கூட்டியே அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றனர். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் அலுவலக வாசலிலேயே பல மணி நேரம் காத்திருந்துவிட்டு மாலையில் திரும்பிச் 
    சென்றனர்.
    வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே உள்ள மேல்வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (52). இவர் அதே கிராமத்தில் குடிநீர் மோட்டார் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு அரசு உத்தரவுப்படி மாதம் ரூ. 1,390 வழங்க வேண்டும். ஆனால், ஜெயபாலுக்கு மாதம் ரூ. 300 மட்டுமே வழங்கப்பட்டு வந்ததுள்ளது. இதுதொடர்பாக, ஜெயபால் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேள்வியெழுப்பியதை அடுத்து அவரை வேலையிலிருந்து நிறுத்தி விட்டனராம். 
    இதுதொடர்பாக, ஜெயபால் கடந்த 2010-ஆம் ஆண்டு மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயபாலுக்கு நிலுவைத் தொகையாக ரூ. 81,080 
    வழங்குவதுடன், மீண்டும் வேலை அளிக்கவும் அதிகாரிகளுக்கு கடந்த 2011 மே 31-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஜெயபால், கடந்த 2016-ஆம் ஆண்டு மாவட்டத் தொழிலாளர் நீதின்றத்தில் நிறைவேற்றுதல் மனுதாக்கல் செய்தார். 
    அதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி செல்வசுந்தரி, கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கணினி, தளவாடப் பொருள்கள் ஆகியவற்றை ஜப்தி செய்து, பாதிக்கப்பட்ட ஜெயபாலுக்கு தொகையை அளிக்க மே 2-ஆம் தேதி உத்தரவிட்டார். இதன்படி, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்வதற்காக கடந்த 15 நாள்களுக்கு முன்பு கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்றனர். அதற்குள் 15 நாள்கள் அவகாசத்தில் ஜெயபாலுக்கு உரிய நிவாரணத் தொகையை அளித்துவிடுவதாக கணியம்பாடி ஒன்றிய அலுவலர்கள் நீதிமன்றத்தில் நேரில் கடிதம் அளித்தனர். இதையடுத்து ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், அலுவலர்கள் கூறியபடி நிவாரணத் தொகையை அளிக்காததுடன், ஜெயபாலுக்கு வேலையும் வழங்காததை அடுத்து சனிக்கிழமைக்குள் (மே 19) ஜப்தி நடவடிக்கையை நிறைவேற்ற நீதிபதி மீண்டும் உத்தரவிட்டார். 
    இதன் அடிப்படையில், நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்வதற்காக கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை சென்றனர். நீதிமன்ற ஊழியர்கள் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டிச் சென்றுவிட்டனர்.
    இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் மாலை வரை அங்கேயே காத்திருந்துவிட்டு, அலுவலர்கள் யாரும் வராததை அடுத்து நீதிமன்றத்துக்கு திரும்பினர். எனினும், சனிக்கிழமை வரை அவகாசம் இருப்பதால் அடுத்த இரு நாள்களில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வழக்குரைகள் தெரிவித்தனர். 
    இதனிடையே, பல்வேறு நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க வந்திருந்த விவசாயிகளும், பொதுமக்களும் அலுவலகம் பூட்டப்பட்டதை அடுத்து கணியம்பாடி ஒன்றிய அலுவலகம் முன் பலமணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai