Enable Javscript for better performance
நாளை ஏலகிரி கோடை விழா: 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்திலுள்ள முக்கிய கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏலகிரிமலை கோடை விழா சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதற்காக 50 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
    வேலூர் மாவட்டத்திலுள்ள கோடை வாசஸ்தலமான 
    ஏலகிரி மலை, வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரியில், சலகாம்பாறை நீர்வீழ்ச்சி, பூங்கானூர் ஏரி, படகு இல்லம், சிறுவர் பூங்கா, அரசு மூலிகை, பழப் பண்ணைகள், ஏராளமான பசுமை மாறா மரங்களும் உள்ளன. மேலும், மலைப்பாதையின் 12-ஆவது கொண்டைஊசி வளைவில் ஏலகிரி மலையின் அழகை முழுவதும் ரசிக்கும் வகையில் தொலைநோக்கி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
    அனைத்து பருவகாலத்திலும் ஒரே மாதிரியான தட்பவெப்பநிலை நிலவுவதால், தமிழகம் மட்டுமன்றி  ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை கவரும் ஏலகிரி மலையில், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
    இதன்படி, இந்த ஆண்டு கோடை விழா சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடக்கிறது. சனிக்கிழமை காலை வெங்கடேசன் குழுவினரின் மங்கல இசையுடன் தொடங்கும் கோடை விழாவில், தொடர்ந்து கலை பண்பாட்டுத் துறையின் கிராமிய கலை நிகழ்ச்சிகள், நடிகர்கள் தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ் குழுவினரின் "கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி, சோலையார்பேட்டை பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மேஜிக் நிகழ்ச்சி, திரில் வீரா நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
    ஞாயிற்றுக்கிழமை ஹரிசரண் பென்னெட், பேண்ட் வாத்தியக் குழுவினரின் இசை நிகழ்ச்சி, திரைப்பட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு, பரதநாட்டியம், மேடை நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெறுகின்றன. இதுதவிர, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. மேலும், மலர்க் கண்காட்சி, செல்லப் பிராணிகள் கண்காட்சி ஆகிவையும் நடைபெறுகின்றன.
    இவ்விழாவை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ந.நடராஜன், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். கோடை விழாவையொட்டி, ஏலகிரியிலுள்ள சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய இடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல மண்டலப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 50 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai