Enable Javscript for better performance
புதிய எரிவாயு தகனமேடை அமைக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூரில் உள்ள எரிவாயு தகனமேடை முறையை மாற்றி நவீன முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர் மாவட்டத்தில், வேலூரை அடுத்து பெரிய நகரம் திருப்பத்தூர். நகரப் பகுதியில் சுமார் 75 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
     இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சார்பில் ரூ. 90 லட்சம் செலவில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது. இதையடுத்து தகனமேடையை பராமரிக்க கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
    திருப்பத்தூரில் உள்ள 36 வார்டுகளில் இருந்து சுமார் 100 சடலங்கள் தகனமேடையில் எரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒரு சடலம் எரிக்க 
    ரூ. 3 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: 
    இந்த எரிவாயு தகனமேடை மிக பழைமையான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. 
    இதில் விறகுகளை வெட்டி வைத்து, சுமார் 2 மணி நேரம் எரிக்கப்பட்ட பிறகுதான் சடலத்தை எரிக்க முடிகிறது.
     தகனமேடை மின்சாரத்தில் இயங்கும் என முதலில் கூறப்பட்டது. மின் பற்றாக்குறை ஏற்பட்டால் எரிவாயு மூலம் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தற்போது கருவேல மரம் மூலம் சடலம் எரிக்கப்படுகிறது. 
    இந்த மரங்கள் எரிக்கப்பட பல மணி நேரம் ஆவதால் சடலங்கள் எரிக்கப்படுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் ஈமச்சடங்கு செய்வது தாமதப்படுகிறது. பல சடலங்கள் அருகே உள்ள மயானத்தில் எரிக்கப்படுகின்றன. இதற்கு ரூ. 10 ஆயிரம் செலவாகிறது.
    தகனமேடை அருகே புதர் மண்டி, குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. வரிப்பணம் மூலம் அமைக்கப்பட்ட தகனமேடை பயனில்லாமல் உள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
    இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, 2 மாதங்களுக்குள் பழைய தகனமேடை முறையை மாற்றி நவீன முறையில் எரிவாயு தகனமேடை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai