திருப்பத்தூர் அருகே 17-ஆம் நூற்றாண்டு: பீஜப்பூர் சுல்தான் கால செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பீஜப்பூர் சுல்தான் அடில் ஷா காலத்து செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் அருகே 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பீஜப்பூர் சுல்தான் அடில் ஷா காலத்து செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் முத்தமிழ், ராதாகிருஷ்ணன்,வெங்கடேசன் உள்ளிட்டோர் திருப்பத்தூர் அருகிலுள்ள சின்ன சமுத்திரம் கிராமத்தில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பீஜப்பூர் சுல்தான் அடில்ஷா காலத்து செம்பு நாணயங்களைக் கண்டெடுத்தனர். இது குறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியது: 
ஜலகாம்பாறை அருகில் ஒரு தோப்பில் உள்ள நடுகல் குறித்து ஆய்வு மேற்கொள்ளச் சென்றபோது, சின்ன சமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் முனிசாமி என்பவரது வீட்டில் பழைய பொருள்கள் சில இருப்பதாகவும் அவற்றில் பழங்கால நாணயங்களும் உள்ளன என்றும் கூறி எங்களை அழைத்துச் சென்றார். அவரது அழைப்பினை ஏற்று அங்கு சென்று பார்த்தபோது பழங்கால நாணயங்கள் சிலவற்றை அங்கு கண்டெடுத்தோம். அவை செம்பு நாணயங்களாகும்.
தொடர்ந்து அந்த நாணயங்களை முறைப்படி சுத்தம் செய்து நாணயவியல் துறை சார்ந்த நிபுணர்களிடம் அனுப்பினோம். அவை கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முகமது அடில் ஷா காலத்தைச் சேர்ந்தவரை என்பது தெரிய வந்தது. இதனை வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சேகர் மற்றும் நாணவியல் கழக உறுப்பினரும் நாணய சேகரிப்பாளருமான தமிழ்வாணன் ஆகியோரும் உறுதிசெய்தனர்.
கண்டறியப்பட்ட மூன்று நாணயங்களும் அடில் ஷா காலத்தைச் சேர்ந்தவை. அவற்றில் பாரசீக மொழியில் அடில் ஷாவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. 
நாணயங்கள் ஒவ்வொன்றும் தலா 2.50 கிராம் எடையைக் கொண்டுள்ளன. நாணயத்தின் ஒருபக்கம் இலை போன்ற அமைப்பிற்குள் ஒன்பது புள்ளிகள் காணப்படுகின்றன. இவை பீஜப்பூர் சுல்தான்கள் அனைவரின் நாணயங்களிலும் காணப்படுகின்றன. இப்புள்ளிகள்அந்த சுல்தான்களின் இலச்சினையாக இருக்கக்கூடும்.
பீஜப்பூர் சுல்தான் முகமது அடில் ஷா (Mohammed Adil Shah) இந்திய வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க ஒருவர்  ஆவார். வடக்கே பீஜப்பூரைத் தலைநகராகக் கொண்டு இவர் ஆட்சி செய்தாலும் தென்னிந்தியாவில் இவர் தனது ஆளுகையைச் சில இடங்களில் நிறுவினார். 
தமிழகத்தின் செஞ்சி, தஞ்சை ஆகிய பகுதிகள் இவரது ஆட்சிக்கு உட்பட்டவையாக இருந்தன. அதாவது, கி.பி. 1646-இல் விஜயநகரப் பேரரசின் அரசர் ஸ்ரீரங்கன் ஒரு போரில் மாபெரும் தோல்வியைச் சந்தித்தார்.
 அவரது இந்தத் தோல்வி தமிழகத்தில் இருந்த அனைத்து நாயக்க அரசுகளையும் பாதித்தது. குறிப்பாக விஜய நகரப் பேரரசின் விசுவாசிகளான தஞ்சை நாயக்கர்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். தஞ்சை நாயக்கர்களின் இந்த நிலையை அறிந்த அடில் ஷா, அவர்களைத் தனக்குக் கப்பம் கட்டும்படி செய்தார். 
பின்னர் கி.பி. 1649இல் அவரது படைகள் செஞ்சியைப் போரிட்டு வென்றன. இன்றைய வேலூர், திருவண்ணாமலை மாவட்டப் பகுதிகள் அவரது கட்டுப்பாட்டில் இருந்தவையே என்பது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com