"வளர்ச்சிக்கான சவால்களைச் சந்திக்க பொறியாளர்களின் பங்களிப்பு அவசியம்'

பெரும்பான்மையான நாடுகள் வளர்ச்சிக்கான மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள புதிய கண்டுபிடிப்புகள்

பெரும்பான்மையான நாடுகள் வளர்ச்சிக்கான மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள புதிய கண்டுபிடிப்புகள் அவசியமாகிறது. இதற்கான ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் பொறியாளர்களின் பங்கு அவசியமானது என்று டேன்போஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் ரவிச்சந்திரன் புருஷோத்தமன் தெரிவித்தார்.
"கிராவிடாஸ்' எனும் சர்வதேச தொழில்நுட்பம், மேலாண்மை திருவிழா வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தியாவின் பல மாநிலங்கள், அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து சுமார் 15 ஆயிரம்  மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது. 
நிகழ்ச்சியன் தொடக்க விழாவில் டேன்போஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் ரவிச்சந்திரன் புருஷோத்தமன் பேசியதாவது:
ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் என்பது பொறியாளர்களின் முக்கிய பங்காகும். இவை வளர்ச்சிக்கான தூண்களாக உள்ளன. பெருபான்மையான நாடுகள் வளர்ச்சிக்கான மிகப்பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளன. குறிப்பாக, தொழில் துறை, வேளாண்மை தொழிலில் சவால்கள் நிறைந்துள்ளன. உற்பத்தி ஓரிடத்திலும், பயனாளிகள் வேறு இடத்திலும் உள்ளதால் உற்பத்தியை பயனாளிகளிடம் சென்று சேர்ப்பதில் செலவினம் அதிகமாகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்றால் அதற்கான புதிய வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும். இது பொறியாளர்களின் முக்கியப் பணியாகும்.
நாட்டிலுள்ள நதிகள் மாசுபட்டுக் கிடப்பதால் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாசுவை நீக்குவதற்கான திட்டம் தேவைப்படுகிறது. 
நாட்டில் ஒரு பக்கம் வெள்ளம் என்றால், மறுபக்கம் வறட்சி நிலவுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வுகாண டேன்போஸ் நிறுவனம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பரிசுத் தொகையுடன் கூடியஆராய்ச்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்றார். 
பின்னர், சிறந்த  திட்டஅறிக்கைக்கான விருது, ரூ. 2 லட்சம் காசோலையை விஐடி மாணவிகள் மேரிசெபாஸ்டின், வி.என்.பிரணதி ஆகியோருக்கு வழங்கினார்.
இந்தியாவுக்கான மொராக்கோ நாட்டின் தூதர் முகம்மது மலீகி பேசியதாவது:
"கிராவிடாஸ்' நிகழ்ச்சி தொழில்நுட்பம் அல்லாதவர்களுக்கான தொழில்நுட்பம் என்ற பொருளுடன் நடத்துவது வரவேற்கத்தக்கது. மொராக்கோ நாடு உரம், ரசாயன உற்பத்தியில் உலகில் முன்னிலை வகிக்கிறது. 
இந்நாட்டில் ஏராளமான உரத்  தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள மொராக்கோ பல்கலைக்கழகம் மிக பழைமையானது. அத்துடன், இந்த நாட்டில் சூரிய மின்உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 
40 சதவீத மின்சாரம் புதுப்பிக்கத்தக்க மின்உற்பத்தி மூலமாக கிடைக்கிறது. மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை  அதிகக்கூடியது வேளாண்மை தொழிலாகும். அந்தவகையில், விஐடி வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருவது  பாராட்டத்தக்கது என்றார் அவர்.
முன்னதாக, விழாவுக்கு தலைமை வகித்து, விஐடி மாணவர்கள் ஜவ்வாது கிஷோர்  பட்டேல், சந்தோஷ் காவேரி ஆகியோருக்கு இளம் ஆராய்ச்சியாளர் விருதுகளை வழங்கியும், விழா மலரை வெளியிட்டும் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
ஒரு நாட்டின் வளர்ச்சி விகிதம் அங்குள்ள தொழில் முன்னேற்றத்தின் மூலமாகவும், வேளாண், மின்உற்பத்தி மூலமாகவும் தீர்மானிக்கப்படுகிறது. உலக அளவில் மின்உற்பத்தியில் இந்தியா பின்தங்கி உள்ளது. நாட்டில் மின்உற்பத்தி மணிக்கு 900 கிலோ வாட்டாக உள்ளது. ஆனால் சீனாவில் மணிக்கு 4 ஆயிரம் கிலோ வாட்டாக உள்ளது. 
எனவே, மின் உற்பத்தியை அதிகரிக்கவும், அதேசமயம் மின் இழப்பைத் தடுக்கவும் வேண்டும். உற்பத்தி செய்யும் மின் அளவில் 20 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. இது மின் திருட்டாலும், மின்  பரிவர்த்தனையினாலும் ஏற்படுகிறது. ஜப்பான், கொரியா நாடுகளில் இந்த மின் இழப்பு 3 முதல் 5 சதவீதமாக மட்டுமே உள்ளது.
இதேபோல், நீரின் அளவும் உலக அளவில் 4 சதவீதமே உள்ளது. இதனால், நீரை கையாள்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது. மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து பாதுகாக்கவும்,  நாட்டிலுள்ள நதிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு, விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். வேலியோ நிறுவனத்தின் இயக்குநர் ஜாஜி விஜயராமன், விஐடி துணைவேநதர் ஆனந்த் ஏ.சாமுவேல், இணைத் துணைவேந்தர் எஸ்.நாராயணன், கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தேவேந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர் சாசாங் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com