சத்துணவுக் கூடத்துக்கு பூட்டுப்போட்ட அமைப்பாளர் பணியிடை நீக்கம்

இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநகராட்சிப் பள்ளி சத்துணவு கூடத்துக்கு பூட்டுப் போட்ட அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநகராட்சிப் பள்ளி சத்துணவு கூடத்துக்கு பூட்டுப் போட்ட அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் மக்கான் அம்பேத்கர் நகரில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தவர் சரஸ்வதி. இவர் அப்பள்ளியின் தலைமையாசிரியையுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டும், மாணவர்களை தாக்கியும் வந்ததாக எழுந்த புகாரை அடுத்து, வி.எம்.செட்டித் தெருவில் உள்ள பள்ளிக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இடமாற்றம் 
செய்யப்பட்டார்.
ஆனால், இடமாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்குச் செல்லாமல் அவர், மக்கான் அம்பேத்கர் நகர் பள்ளிக்கே வந்து அங்கு அமைப்பாளராக இருந்த பவானியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சமையல் பொருள்கள் பாதுகாக்கப்படும் அறையையும் பூட்டிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றதை அடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட பள்ளியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி, பள்ளியின் சத்துணவு பொருள்கள் அறைக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து, பொருள்களை எடுத்து சமைக்கவும் உத்தரவிட்டார். 
மேலும், இதுதொடர்பாக அவர் ஆட்சியருக்கு அறிக்கையை தாக்கல் செய்தார். இந்நிலையில், சத்துணவுக் கூடத்துக்கு பூட்டுப்போட்டு தகராறில் ஈடுபட்ட அமைப்பாளர் சரஸ்வதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பிறப்பித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com