சுரங்கப்பாதைப் பணி தொடங்கப்படாததைக் கண்டித்து  கருப்புக் கொடி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் சுரங்கப்பாதைப் பணி தொடங்கப்படாததைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் சுரங்கப்பாதைப் பணி தொடங்கப்படாததைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
வாணியம்பாடி-நியூடவுன் பகுதி இணைக்கும் இடத்தில் நியூடவுன் ரயில்வே கேட் (எல்சி 81) அமைந்துள்ளது.  இந்த ரயில் மார்க்கத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்வதால் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். அப்பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். 
இதையடுத்து மத்திய, மாநில அரசுகளால் ரூ. 16 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அப்பணிகள் தொடங்குவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதியன்று நியூடவுன் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது.
ரயில்வே கேட் மூடப்பட்டு  ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையிலும் பள்ளம் தோண்டியதோடு பணிகள் நிறுத்தப்பட்டு, வேறு எந்தப் பணியும் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் ரயில்வே கேட் பகுதியை கடக்க சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி வரவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் ஆபத்தான நிலையில் நியூடவுன் ரயில்வே கேட் பகுதியைக் கடந்து செல்கின்றனர். 
சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கருப்பு சட்டை அணிந்தும், கைகளில் கருப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தியும் நியூடவுன் ரயில்வே கேட் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சவுகத் பர்ஹானா தலைமை வகித்தார். நகர மதிமுக செயலாளர் நாசீர் கான்,  நகர தேமுதிக செயலாளர் சங்கர், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் பன்னீர் செல்வம், முன்னாள் நகர்மன்ற  உறுப்பினர்கள் வசீம் அக்ரம், ராஜா, கஜேந்திரன் மற்றும் அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஒப்பந்ததாரரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், சுரங்கப்பாதைப் பணிகளை உடனடியாக தொடங்கவும் வலியுறுத்தினர். 
ஆர்ப்பாட்டத்தையொட்டி, வாணியம்பாடி டி.எஸ்.பி. முரளி தலைமையில் ஆய்வாளர் சுரேஷ், ராமசந்திரன் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com