பெண்கள் நலனுக்கு அதிமுக அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும்: எம்.பி. அரி

பெண்களின் நலனுக்கு அதிமுக அரசு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் என்று அரக்கோணம் எம்.பி. அரி தெரிவித்தார்.

பெண்களின் நலனுக்கு அதிமுக அரசு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் என்று அரக்கோணம் எம்.பி. அரி தெரிவித்தார்.
அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டசத்து திட்டத்துறை மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் சீர்வரிசைகளை வழங்கி அவர்  பேசியதாவது:
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பெண்களின் நலனுக்கான திட்டங்கள் ஜெயலலிதா அரசால் அதிக அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்களின் நலனுக்காகவே விலையில்லா பொருள்கள் அதிக அளவில் வழங்கப்பட்டன. 
அனைத்து மதத்தினரையும், அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைத்து ஒரே நாளில் நடத்தப்படும் திட்டமே சமுதாய வளைகாப்பு. பெண்கள் நலனுக்கு அதிமுக அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்றார் அவர்.
தொடர்ந்து, அரக்கோணம் எம்எல்ஏவும், அதிமுக வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான சு.ரவி பேசியதாவது:
வளைகாப்பு நிகழ்ச்சி என்பது கர்ப்பிணிகளின் மகிழ்ச்சிக்காக நடத்தப்படுவது. இத்தகைய நிகழ்ச்சிகள் ஏழைகளுக்கு எட்டாக்கணியாக இருந்த நிலையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த சமுதாய வளைகாப்பு ஏழைகளுக்கு தமிழக அரசால் நடத்தப்படும் என்று அறிவித்தார். 
இந்த வளைகாப்பு நடத்தப்படுவதால், அனைத்து கர்ப்பிணிகளும் நல்ல உடல்நலத்துடனும், மனமகிழ்ச்சியுடனும் குழந்தைகளை சுகப்பிரசவம் மூலமே பெற்றுக்கொள்ள முடிகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கான தமிழக அரசின் சீர்வரிசைகளை எம்.பி. அரி, எம்எல்ஏ சு.ரவி ஆகிய இருவரும் இணைந்து வழங்கினர். இதில், அதிமுக நகரச் செயலர் பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர்கள் பிரகாஷ் (அரக்கோணம்), ஏ.ஜி.விஜயன் (நெமிலி), முன்னாள் நகரச் செயலர் செல்வம், முன்னாள் மாவட்டப் பொருளாளர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம், செப். 14: குடியாத்தம் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், 210 கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் சீர்வரிசைப் பொருள்களை வழங்கி கே.வி. குப்பம் எம்எல்ஏ ஜி. லோகநாதன் பேசியதாவது: 
தமிழகத்தில் பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்ற நாளில் இருந்து மகளிர் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வந்தார். 
பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க தொட்டில் குழந்தைத் திட்டத்தைக் கொண்டு வந்தார். 
இதற்காக அன்னை தெரசாவே, ஜெயலலிதாவைப் பாராட்டினார். பள்ளி செல்லும் மாணவிகளுக்கு மிதிவண்டி, மடிக்கணினிகளை வழங்கி வந்தார். பெண் கல்வியை  ஊக்குவிக்கும்  வகையில், அனைத்து பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி போன்ற திட்டங்களை அறிவித்தார். இவற்றைப் பெறவாவது பெண்கள் கல்வி கற்க மாட்டார்களா என்பது அவரது எண்ணம்.  
கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, குழந்தைகளை பெற்றெடுத்தால் 14 வகையான பொருள்கள் அடங்கிய "அம்மா பேபி கிட்' ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தினார். அவர் வழியில், தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மகளிர் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர் என்றார் அவர். 
நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் வி. ராமு, குடியாத்தம் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வி. கோமதி, மேற்பார்வையாளர்கள் ஜி. விமலா, எஸ். சாந்தி, அதிமுக அவைத் தலைவர் மோகன், செட்டிகுப்பம் ஊராட்சி முன்னாள் தலைவர் செ.கு. வெங்கடேசன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கே.வி. குப்பம் ஒன்றியம் சார்பில், வித்யாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், 120 கர்ப்பிணிகளுக்கு எம்எல்ஏ லோகநாதன் சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார். 
இதில் அதிமுக ஒன்றியச் செயலர் கே.எம்.ஐ. சீனிவாசன், பள்ளித் தாளாளர் எஸ். அசோக்குமார்,  திட்ட அலுவலர் மைதிலி கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, நகரங்களுக்கு உள்பட்ட 160 கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா ராணிப்பேட்டை நகராட்சி திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். வாலாஜாபேட்டை வட்டாரக் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வினோதினி விழாவைத் தொடங்கி வைத்து பேசினார்.   
இதில், வாலாஜாப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் சேஷா வெங்கட், ராணிப்பேட்டை நகர இளைஞரணி அமைப்பாளர்  ஆர்.இ.எழில்வாணன், 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்களை வழங்கினர். 
நிகழ்ச்சியில், அங்கன்வாடி அலுவலர்கள், ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


சோளிங்கரில்...
சோளிங்கரில் 129 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, சோளிங்கர் வட்டாரக் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜி.அன்பரசி தலைமை வகித்தார். சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்தரமூர்த்தி விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து குழந்தை நல மருத்துவர் மகேஸ்வரி, சமூக நலத்துறை அலுவலர் குமாரி ஆகியோர் பேசினர். சோளிங்கர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ச.கார்த்திகேயன் 129 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார். 
இதில், அதிமுக நிர்வாகிகள் ஏ.எல்.விஜயன், ராமு, வி.குப்பன், ஏ.எல்.சாமி, எ.கலைக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஆற்காட்டில்...
ஆற்காடு ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் 320 கர்ப்பிணிகளுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவுக்கு, ஆற்காடு அதிமுக ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எம்.குட்டி தலைமை வகித்தார். 
ஆற்காடு வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கா.கிரிஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் அஞ்சலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஏ.வி.சாரதி, திமிரி ஒன்றிய அதிமுக செயலாளர் குமார் ஆகியோர் 320 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்களை வழங்கினர். 
நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் எஸ்.சிகாமணி, பிரேமா வேலு, உலகநாதன், வெங்கடேசன், சின்னகண்ணு ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com