தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் வீட்டில் சோதனை
By DIN | Published On : 04th April 2019 06:16 AM | Last Updated : 04th April 2019 06:16 AM | அ+அ அ- |

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுதாகர் யாதவ் வீட்டில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பொதுட்டூரைச் சேர்ந்த சுதாகர் யாதவ் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவராக செயல்பட்டு வருகிறார். அவர் தற்போது கடப்பா மாவட்டம், மைதுகூறு தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருக்கான வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பொதுட்டூரில் உள்ள அவர் வீட்டில் புதன்கிழமை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் பெருமளவில் பணம், நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆந்திர மாநிலத்தில், 40 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவது உறுதி என்பதை அறிந்த அக்கட்சித் தலைவர், தேர்தல் பிரசாரத்தைப் புறக்கணித்து ஹைதராபாதில் அமர்ந்து கொண்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என தெலுங்கு தேசம் கட்சியினர் கூறி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் வரும் 11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.