10 கம்பெனி துணை ராணுவப் படை  வேலூருக்கு இன்று வருகை

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புக்காக 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் வேலூருக்கு சனிக்கிழமை

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புக்காக 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் வேலூருக்கு சனிக்கிழமை வருகை தர உள்ளனர். இவர்களுடன் உள்ளூர் போலீஸாரும் இணைந்து மாவட்டம் முழுவதும் மொத்தம் 6,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தல், பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் வேலூருக்கு சனிக்கிழமை வருகின்றனர். இவர்களுடன் உள்ளூர் போலீஸார், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க் காவல் படையினர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 6,500 பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்கும் வகையில் இவர்கள் சோதனைச் சாவடிகள், மக்கள் கூடும் முக்கிய இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். மேலும், வாக்குப் பதிவு நாள்களில் வாக்குச்சாவடி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com