சுடச்சுட

  

  திருப்பத்தூர் அருகே சோழர் கால நடுகல் - நீதிக்கல் கண்டெடுப்பு

  By DIN  |   Published on : 17th April 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் 700 ஆண்டுகள் பழைமையான நடுகல்லும் நீதிக்கல்லும் கண்டறியப்பட்டன.
  இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது:
  திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தொலைவில் கொரட்டி ஏரி அருகே கீழ்க்குப்பம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் தொன்மையான நடுகல் உள்ளது. 
  இக்கல் மூன்றடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. கல்லில் ஒல்லியான தேகத்துடன் காணப்படும் வீரன் தன் வலக்கரத்தில் ஆயுதத்தை ஏந்தித் தாக்குவது போல் காணப்படுகிறான். வீரனின் உடலில் ஆபரணங்கள் ஏதும் இல்லை.
  இடைக் கச்சுடன் வீரர்களுக்கே உரித்தான கீழாடையினை அணிந்துள்ளான். எழுத்துப் பொறிப்புகள் ஏதும் இல்லாமல், சிதைந்த நிலையில் உள்ள இந்நடுகல் ஒரு வீரனுக்கு வடிக்கப்பட்ட முழுமையான நடுகல்லாகும். கால ஓட்டத்தில் இக்கல் உடைந்து சிதைந்துள்ளது. அதனால் எழுத்துப் பொறிப்புகள் சிதைந்திருக்கக் கூடும். இக்கல் காளியம்மன் கோயிலின் வெளியே உள்ள சிறிய அறையில் வைத்து வழிபடப்படுகிறது. இவ்வட்டார மக்கள் இக்கல்லை வீரபத்திரன் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
  இந்த நடுகல் இப்பகுதியில் போரிட்டு இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கக்கூடும். இக்கல் தோற்றத்தில் தலைப்பலிக் கல்' போன்றும் உள்ளது. நடுகல்லின் அமைப்பைக் கொண்டு இதன் காலம் பிற்காலச் சோழர்கள் ஆட்சிக்காலமான கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறிய முடிகிறது என்றார் ஆ.பிரபு.
  இத்தகவலை தொல்லியல் ஆய்வாளரும், வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான  முனைவர் சேகர் உறுதிசெய்தார். அவர் இது தொடர்பாகக் கூறியது:
  இன்றைய நீதிமன்றங்கள் போல் அக்காலத்தில் மக்களுக்கு நீதி வழங்க அறங்கூறும் அவையம், ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அமைப்புகள் இருந்ததாக இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த அமைப்புகளைக் கடந்து இயற்கைச் சக்திகளிடம் நீதி வேண்டி முறையிடும் வழக்கமும் மக்களிடம் இருந்துள்ளதைக் காண முடிகிறது. அவ்வகை வழக்கமே நீதிக்கல் வழிபாடாகும். தங்களது குறைகளை நீதிக்கல்லிடம் முறையிட்டால் அது தீர்க்கும் அல்லது குற்றம் செய்தோரைத் தண்டிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவியது.
  கீழ்க்குப்பத்தில் நடுகல் அமைந்துள்ள இடத்திற்கு அருகே திறந்தவெளியில் 5 அடி உயரமுள்ள ஒரு தூண் நடப்பட்டுள்ளது. இது நீதிக்கல் ஆகும். அதாவது இவ்வட்டார மக்கள் களவு போகும் பொருள்கள் திரும்பக் கிடைக்கவும், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும் இங்குள்ள உரலில் காய்ந்த மிளகாயைக் கொண்டுவந்து தண்ணீர்விட்டு அரைத்து இத்தூண் கல்லில் தேய்த்துவிட்டு வழிபட்டுச் செல்கின்றனர். அவ்வாறு செய்கையில் களவு போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் அல்லது திருடியவர் தண்டிக்கப்படுவார் என்று நம்புகின்றனர்.
  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இவ்வாறான வழிபாட்டு முறைகள் வழக்கத்தில் உள்ளன. குறிப்பாகக் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள புகழ்பெற்ற மாசாணியம்மன் கோயிலில் இது போன்ற மிளகாய் வழிபாட்டு முறை உள்ளது என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai