சுடச்சுட

  

  தேர்தல் ஆணையத்துக்கு வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் மனு

  By  வேலூர்  |   Published on : 17th April 2019 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த் தேர்தல் ஆணையத்துக்கு செவ்வாய்க்கிழமை மனு அனுப்பியுள்ளார்.
   இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுசில் சந்திரா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ஆகியோருக்கு அவர் அனுப்பிய மனு:
   எனது மற்றும் எனது தந்தையும் திமுக பொருளாளருமான துரைமுருகன் வீடுகளில் கடந்த மார்ச் 29, 30 ஆகிய தேதிகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ. 10 லட்சம் எடுத்துச் சென்றனர். அந்தத் தொகைக்கான முறையான ஆவணங்கள் வருமான வரித் துறையினருக்கு சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் அதுதொடர்பாக வருமான வரித் துறையினர் உரிய பதில் அளிக்கவில்லை.
   இச்சோதனை நடத்தப்பட்டு 16 நாள்களுக்குப் பிறகு தற்போது தேர்தல் ஆணையம் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்து அறிவித்துள்ளது. எங்கள் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்காமல், இறுதிக்கட்ட நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய பாஜக மற்றும் தமிழக அதிமுக அரசுகள் பின்னணியில் இருப்பதை உணரமுடிகிறது. இது திட்டமிட்ட சதி.
   தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பாஜக, அதிமுக அரசுகளுக்கு சாதகமாகக் கருதப்படுகிறது.
   எனவே, ஏற்கெனவே அறிவித்தபடி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடத்த வேண்டும். இல்லையெனில் சட்டப்படி இதை எதிர்கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai