சுடச்சுட

  


  வாணியம்பாடியில் வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். கோணாமேடு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்றனர்.
  நகரச் செயலர் சதாசிவம் தலைமை வகித்தார். மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார். 
  ஊர்வலம் காதர்பேட்டை, கச்சேரி சாலை, பூக்கடை பஜார், முகமதுஅலிபஜார், ஆற்றுமேடு, சி.எல்.ரோடு, புதூர், நியூடவுன், நேதாஜி நகர் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது.
  நாட்டறம்பள்ளி ஒன்றியச் செயலர் ராஜா,  நகர்மன்ற அவைத் தலைவர் சுபான், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலர் சதீஷ்குமார், மாவட்டப் பிரதிநிதி பிரகாசம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
  குடியாத்தத்தில்...
  வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், குடியாத்தம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். மூர்த்தி ஆகியோரை ஆதரித்து அதிமுக கூட்டணிக் கட்சியினர் செவ்வாய்க்கிழமை குடியாத்தம் நகரில் இரு சக்கர வாகனப் பேரணி நடத்தினர்.
  தாழையாத்தம் பஜாரில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கிய பேரணி நகரில் உள்ள 36 வார்டுகள் வழியாகச் சென்றது. 
  இதில் வேட்பாளர்கள் ஏ.சி. சண்முகம், ஆர். மூர்த்தி, தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ராஜன், அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, அவைத் தலைவர் வி.என்.தனஞ்செயன், தமாகா  நிர்வாகிகள் கே.எம்.ஜி. ராஜேந்திரன், எஸ். அருணோதயம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  அமமுக சார்பில்...
  குடியாத்தம் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன் குடியாத்தம் பலமநேர் சாலையில் தொடங்கி 10- ஆவது வார்டு முழுவதும் வீடு, வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.
  கட்சியின் நகரச் செயலர் இ.நித்யானந்தம், ஒன்றியச் செயலர் எம்.கே.பூபாலன், நிர்வாகிகள் வி.எம்.கே.ஜெயப்பிரகாஷ், செல்வம், சண்முகம், சைதை பாபு,  மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த கே.சுயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
  அரக்கோணத்தில்...
  அரக்கோணம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் என்.ஜி.பார்த்தீபன் செவ்வாய்க்கிழமை தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை எஸ்.ஆர்.கேட் அருகில் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து பிரசார ஊர்வலம் நடைபெற்றது. பழனிபேட்டை, பஜார், பழைய பேருந்து நிலையம், சுவால்பேட்டை வழியாகச் சென்ற ஊர்வலம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகே நிறைவடைந்தது.
  ஊர்வலத்தில் வேட்பாளர் என்.ஜி.பார்த்தீபன், நகரச் செயலர் கண்ணதாசன், ஒன்றியச் செயலர் துளசிராமன், நெமிலி ஒன்றியச் செயலர் கோ.சி.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  வாணியம்பாடியில்...
  வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக சார்பில் முன்னாள் மாவட்டச் செயலர் தேவராஜி தலைமையில் திமுகவினர் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனர்.
  ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட நிம்மியம்பட்டு, முல்லை, கொத்தகோட்டை, செக்குமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். 
  மாவட்டப் பொறியாளரணி அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றியச் செயலர் அசோகன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர். 
  இதேபோல் காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் ஜெ.அஸ்லம்பாஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் வாக்குகள் சேகரித்தனர். காங்கிரஸ் நிர்வாகிகள் இலியாஸ்கான், பைசல்அமன், முதசீர்பாஷா, கவியரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
  ஆற்காட்டில்...
  அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி ஆற்காடு நகரப் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரத்தை நிறைவு செய்தார்.
  முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு, பாமக முன்னாள் துணைப் பொதுச் செயலர் எம்.கே.முரளி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் தா.கு.கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
  ஆம்பூர் தொகுதி
  இடைத் தேர்தலில்...
  ஆம்பூர் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
  ஆம்பூர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெற உள்ளது.  இடைத்தேர்தலில் ஜோதிராமலிங்கராஜா (அதிமுக), அ.செ.வில்வநாதன் (திமுக), ஆர்.பாலசுப்பிரமணி (அமமுக), கரீம்பாஷா (மநீம), உள்ளிட்ட10 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 20 நாள்களாக நடைபெற்று வந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. பிரசாரத்தின் இறுதி நாளில் அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
  ஆம்பூர் தொகுதியில் 2,21,302 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,08,247 ஆண்  வாக்காளர்களும், 1,13,047 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேரும் உள்ளனர். இதற்காக 242 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
  புதன்கிழமை காலை முதல் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களும், பாதுகாப்புப் பணிக்காக போலீஸாரும் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது. பதிவான வாக்கு இயந்திரங்கள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai