ஏலகிரிமலையில் கல்வெட்டு, கற்கோடரிகள் கண்டெடுப்பு

ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியில் கல்வெட்டு மற்றும் கற்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியில் கல்வெட்டு மற்றும் கற்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி மற்றும் வரலாற்று ஆர்வலர் இரா.நீலமேகம் ஆகியோர் மேற்கொண்ட களஆய்வில் இவற்றை கண்டெடுத்துள்ளனர். 
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியது: 
ஏலகிரிமலையில் ஏராளமான பழங்காலத் தடயங்கள், நடுகல் மற்றும் கல்வெட்டுகள் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. 
அதன்படி, அத்தனாவூரில் உள்ள பெருமாள் கோயிலில் திறந்தவெளியில் உள்ள இந்தக் கல்வெட்டும், கோயிலுக்குள் இருக்கும் கற்கோடரிகளும் இம்மலையின் பழைமையான மரபைத் எடுத்துரைக்கும் வகையில் உள்ளன. 3.5 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட இந்தப் பலகைக் கல்லின் இரு பக்கமும் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. 
இதில் உள்ள வடிவமைப்பைப் பார்க்கும்போது இவை கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால எழுத்துகள் எனக் கருதப்படுகிறது. 
கோயிலின் உட்புறத்தில் பெரிய கல் உரல் உள்ளது. இதைச் சுற்றிலும் ஏராளமான கற்கோடரிகள் காணப்படுகின்றன. இவை மனிதன் இரும்பைப் பயன்படுத்துவதற்கு முன் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்.
எனவே, இக்காலத்தை புதிய கற்காலம் என வரலாற்று அறிஞர்கள் அழைப்பர். இதன் காலம் கி.மு.1000 என்று கருதப்படுகிறது. இம்மலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்தனர் என்பது இதன் மூலம் உறுதிப்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com