வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மனு

குடியரசுத் தலைவரால் அண்மையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் ரத்து செய்யப்பட்ட தேர்தலை விரைந்து நடத்தக் கோரி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சார்பில் தேர்தல்


குடியரசுத் தலைவரால் அண்மையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் ரத்து செய்யப்பட்ட தேர்தலை விரைந்து நடத்தக் கோரி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சார்பில் தேர்தல் ஆணையத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. 
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் களத்தில் இருந்தார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
ரத்து: இந்நிலையில், கடந்த மார்ச் 29, 30 ஆகிய தேதிகளில் துரைமுருகனின் வீடு, பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதில் ரூ.11.48 கோடிக்கும் அதிகமான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது மகனும், திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த், உறவினர் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதிரடி சோதனை தொடர்பாக வருமான வரித் துறையினர், தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்திருந்தனர். அந்த அறிக்கையை ஆராய்ந்த தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். 
கோரிக்கை: இதனிடையே, ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, அதிமுக-தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி. சண்முகம், பாஜகவைச் சேர்ந்த ஓம் பாதக், நீரஜ் ஆகியோர் இந்திய  தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவைச் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். மத்திய பிரதேச தலைமைச் செயலர், காங்கிரஸின் முகவர் போலச் செயல்படுகிறார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைபெற சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்' என்றார். 
வேலூர் தொகுதி என்டிஏ வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறுகையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை 6-ஆவது அல்லது 7-ஆவது கட்ட மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து உடனடியாக நடத்துமாறு தேர்தல் ஆணையர்கள் மூவரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். பாதிக்கப்பட்ட வேட்பாளர் என்ற முறையில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரசாரம் முழுமையடைந்த நிலையில், வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கிட்டதட்ட 5 ஆயிரம் தபால் வாக்குகள் செலுத்தியாகிவிட்டன. 
நாடு முழுவதும் மக்கள் வாக்களித்து வரும் நிலையில், வேலூர் மக்களும் ஜனநாயகக் கடமையாற்ற  வேண்டும் என்ற நோக்கிலும் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது களத்தில் இருக்கும் வேட்பாளர்களைக் கொண்டே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 
மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com