முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
By DIN | Published On : 04th August 2019 12:04 AM | Last Updated : 04th August 2019 12:04 AM | அ+அ அ- |

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயில் பெட்டிகள் சனிக்கிழமை தடம் புரண்டன.
கேரள மாநிலம், மதுக்கரையில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு சரக்கு ரயில் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டது. சனிக்கிழமை மதியம் ஜோலார்பேட்டை அருகே பக்கிர்தர்கா ரயில்வே கேபின் பகுதியில் வந்தபோது சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.
இதையறிந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே உதவிக் கோட்டப் பொறியாளர் அபிஷேக் வர்மா, நிலைய மேலாளர் சுந்தரமூர்த்தி, ரயில்வே மேற்பார்வைப் பொறியாளர் சுரேஷ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு, மற்றப் பெட்டிகள் இணைக்கப்பட்டு, ரயில் இயக்கப்பட்டது. சிறிது தூரம் சென்றபோது 43-ஆவது பெட்டி மீண்டும் தடம் புரண்டது. இதையடுத்து அப்பெட்டியைத் துண்டித்து விட்டு மீதமுள்ள பெட்டிகளை மட்டும் இணைத்துக் கொண்டு திருப்பத்தூர் நோக்கி ரயில் சென்றது.
பின்னர், தடம்புரண்ட பெட்டிகளைச் சீரமைக்குப் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் ஏதும் இயக்கப்படாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
இதுதொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி
வருகின்றனர்.