Enable Javscript for better performance
திமுக அளிக்கும் வாக்குறுதிகள் செயல்படுத்த முடியாதவை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்- Dinamani

சுடச்சுட

  

  திமுக அளிக்கும் வாக்குறுதிகள் செயல்படுத்த முடியாதவை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

  By DIN  |   Published on : 04th August 2019 12:05 AM  |   அ+அ அ-   |    |  


  திமுக அளிக்கும் வாக்குறுதிகள் செயல்படுத்த முடியாதவை. உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றிபெற திட்டமிட்டுள்ளனர் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
  வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து சனிக்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:
  வேலூர் மக்களவைத் தொகுதியில் மக்கள் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று வேலூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும். மேலும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மக்களவைக்குச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
  அதிமுக ஆட்சிதான் நல்ல திட்டங்களை மக்கள் கேட்காமலேயே அளித்துக் கொண்டுள்ளது. திமுக ஆட்சியில் நிலவிய கடுமையான மின்வெட்டை போக்கி தடையில்லா மின்சாரம் வழங்கியதும் அதிமுக அரசுதான். இந்த ஆட்சியில்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீடில்லா ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டித்தருவதும் அதிமுக அரசுதான். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 7 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்டா இல்லாதவர்களுக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்கி வீடுகள் கட்டித்தரப்படும். 
  திமுக தலைவருக்கு பல டிவி சேனல்கள்கள் உள்ளன. அவற்றின் கட்டணம் ரூ. 300-ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு மக்களின் கோரிக்கையை ஏற்று கேபிள் டிவி கட்டணத்தை ரூ. 154- ஆக குறைத்துள்ளது. அந்தவகையில், இந்த அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்கள் நலனுக்கானது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கான ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம் தேர்தல் முடிந்து 15 நாள்களில் வழங்கப்படும். அதே சமயம், திமுக அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத்த முடியாதவை. உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றிபெற திட்டமிட்டுள்ளனர் என்றார் அவர்.
  தொடர்ந்து வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேசியது:
  வேலூர் மக்களவைத் தொகுதியில் நான் போட்டி யிடுவது இது மூன்றாவது முறை. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இன்னும் நான்கரை ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் பெறப்போகும் ஊதியம் ரூ.45 லட்சம் இருக்கும் என்றும், அதில் 6 பேரவைத் தொகுதிகளிலும் திருமண மண்டபங்கள் எப்படி கட்டித்தர முடியும் என கேட்கின்றனர். நான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் ரூ. 2 கோடி அளவுக்கு பள்ளிக் கட்டடங் கள் கட்டித் தந்துள்ளேன். அங்கு செயல்படுத்தியது போல் எனது சொந்த தொகுதியிலும் திட்டங்களை செயல்படுத்துவேன்.
  இது பிரதமரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய தேர்தல் அல்ல என்றாலும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ள என்னால் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தேவையான திட்டங்களை பெற்றுத்தர முடியும் என்றார் அவர்.  
  பிரசாரத்தையொட்டி, தொரப்பாடி எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கிய இருசக்கர வாகனப் பேரணி, டோல்கேட், செல்லியம்மன் கோயில், வேலப்பாடி, பழைய பேருந்து நிலையம், சிஎம்சி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நிறைவடைந்தது.
  தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி ந. நடராஜன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எஸ்.வளர்மதி, சி.பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai