முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்களே மக்களவைக்குச் செல்ல வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
By DIN | Published On : 04th August 2019 12:04 AM | Last Updated : 04th August 2019 12:04 AM | அ+அ அ- |

மக்களவைக்குச் செல்லக்கூடியவர்கள் லட்சியவாதிகளாக, கொள்கை உடையவர்களாக, மாநிலத்தின் உரிமைகளைப் பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்தை ஆதரித்து பிரசாரத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை வேலூர் மண்டித் தெருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): மக்களவைக்குச் செல்லக்கூடியவர்கள் லட்சியவாதிகளாக, கொள்கை உடையவர்களாக, மாநிலத்தின் உரிமைகளைப் பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அதற்கு வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி பெற்ற வேண்டும்.
தபால் துறை மட்டுமல்ல பல்வேறு துறைகளிலும் தமிழில் தேர்வு எழுத முடியாத சூழல் இருந்தது. அதற்கு எதிராக திமுக கூட்டணி எம்.பி.க்கள் மக்களவையில் குரல் கொடுத்ததால் தபால் துறை தேர்வை தமிழிலும் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுதான் திமுக கூட்டணி அடைந்த வெற்றிக்கான சாதனை என்றார் அவர்.
வைகோ (மதிமுக): தற்போது காஷ்மீரில் பதற்றம். அம்மாநிலத்தை விட்டு லட்சக்கணக்கானோர் வெளியேற ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அங்குள்ள இஸ்லாமியர்கள் எங்கே செல்வர் என்பதற்கு பதில் இல்லை. இதற்கெல்லாம் காரணமான மத்திய அரசுக்கு பாடம் கற்பிக்க 38 தொகுதிகளில் அளிக்கப்பட்டதைப்போல் வேலூர் தொகுதியிலும் திமுகவுக்கு வெற்றி அளிக்க வேண்டும். மேலும், தமிழக உரிமைகளையும், வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கவும் மக்கள் திமுகவுக்கு ஆதரவுதர வேண்டும் என்றார் அவர்.
திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அடைந்த வரலாறு காணாத வெற்றி என்பது கருணாநிதி விட்டுச் சென்ற இடத்தை மட்டுமல்ல, ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தையும் நிரப்பும் தகுதி திமுக தலைவர் ஸ்டாலினுக்குத்தான் உண்டு என்பதை உணர்த்தியுள்ளது. தொடர்ந்து வேலூர் தொகுதியிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி.
திமுக வேட்பாளர் வெற்றி பெறும்போது ஏற்கெனவே உள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்களு டன் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பார். மாறாக அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுபவராக மட்டுமே இருப்பார் என்றார்.
காதர்மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): திமுக என்பது திராவிட பாரம்பரியத்தை மட்டுமல்ல, சிறுபான்மையின மக்களின் உணர்வுகளையும் பாதுகாக்கக்கூடிய இயக்கம். ஆனால், சிறுபான்மை மக்களின் ஷரியத் சட்டத்தை சிதைத்து ஒரே சட்டத்தைக் கொண்டு வரமுயற்சியில் ஆளும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்தத் தேர்தல் மூலம் பதிலடி அளிக்க வேண்டும் என்றார் அவர்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): வேலூர் தொகுதியில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டது. அதற்கு இந்தத் தொகுதிக்கு உள்பட்ட ஆம்பூர், குடியாத்தம் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பதே உதாரணம். விவசாயிகளின் வாழ்வாதாரமான பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திரத்தின் முயற்சியை தடுக்க அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி எனக் கூறிக் கொண்டுள்ளார். அதற்கு இத்தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்றார் அவர்.
டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்): வேலூர் மாவட்டத்தில் உள்ள பீடித் தொழில், தோல் தொழில்கள் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள பெல், சேலம் உருக்காலை விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல ரயில் நிலையங்கள் தனியாருக்கு விடப்பட உள்ளன. இதை மாநில அரசு எதிர்ப்பதில்லை. மாறாக தமிழக அரசு திட்டங்களைச் செயல்படுத்த அளிக்கப்பட்ட ரூ. 28 ஆயிரம் கோடி நிதி திருப்பியனுப்பட்டுள்ளதாக சிஐஜி ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு தொகையை செலவழிக்கத் தெரியாத அரசு நீடிக்க வேண்டுமா என்பதை இந்தத் தேர்தல் மூலம் மக்கள் நிரூபிக்க வேண்டும் என்றார் அவர்.
திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த்: ஆகஸ்ட் 7-ஆம் தேதி கருணாநிதி நினைவு நாளாகும். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கள்கிழமை (ஆக.5) நடக்கும் வேலூர் தொகுதி தேர்தல் வெற்றி அமைய வேண்டும். அதற்கு மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
திமுக பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.