சிறையிலுள்ள கணவரைச் சந்திக்க எஸ்.பி.யிடம் நளினி கோரிக்கை

சிறையில் உள்ள கணவர் முருகனை சந்திக்க நளினி வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறையில் உள்ள கணவர் முருகனை சந்திக்க நளினி வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.
 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் இருந்து மகளின் திருமண ஏற்பாட்டிற்காக 30 நாள்கள் பரோலில் விடுவிக்கப்பட்டு ரங்காபுரத்தில் தங்கியுள்ளார்.
 அவர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
 10-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நளினி வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி மணிமாறன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 அங்கு கையெழுத்திட்டு மீண்டும் அவர் ரங்காபுரம் வீட்டுக்குத் திரும்பினார். இதனிடையே, சிறையில் நளினி, முருகன் தம்பதி உயர் நீதிமன்ற அனுமதியின் பேரில் 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேசுவது வழக்கம்.
 ஆனால், நளினி பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கமான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
 அதேசமயம், 30 நாள்களில் ஏதேனும் இரு நாள்கள் சந்தித்துப் பேசவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 இதைத் தொடர்ந்து, தனது மகள் திருமண ஏற்பாடு தொடர்பாக கணவர் முருகனை சிறையில் சந்தித்து பேச வேண்டும் என்று நளினி வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாருக்கு ஞாயிற்றுக்கிழமை மனு அனுப்பியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 அதன்படி, நளினி, முருகன் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com