வேலூர்: கடந்த தேர்தல்களை விட குறைந்த வாக்குப் பதிவு

வேலூரில் கடந்த காலங்களில் நடந்த தேர்தலைக் காட்டிலும் இப்போது நடந்த தேர்தலில் குறைந்த சதவீதமே வாக்குகள் பதிவாகியுள்ளன.


வேலூரில் கடந்த காலங்களில் நடந்த தேர்தலைக் காட்டிலும் இப்போது நடந்த தேர்தலில் குறைந்த சதவீதமே வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு தேர்தலின் போதும் 74 முதல் 75 சதவீதம் வரை வாக்குகள் பதிவான நிலையில், இந்தத் தேர்தலில் 72 சதவீதம் வரை மட்டுமே வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேலூர் மக்களவைத் தொகுதியில் வேலூர், கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், அணைக்கட்டு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தொகுதியில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 75 சதவீதத்துக்கு அதிகமாகவே வாக்குகள் பதிவாகியுள்ளன. வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 68 சதவீதம் பதிவானது. 
சட்டப்பேரவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் மொத்த சதவீதம் 75.43 ஆகும்.இதேபோன்று, கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 74.58 சதவீத வாக்குகள் பதிவாகின.  முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது முந்தைய தேர்தல்களைக் காட்டிலும் வாக்குப் பதிவு சதவீத அளவு 2 முதல் 3 சதவீதம் குறைந்துள்ளது.
வேலை நாள் காரணம்?: வேலூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் பலரும் பிற மாவட்டங்கள், மாநில தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். வாக்குப் பதிவு தினத்தன்று விடுமுறை விட வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டும் பல நிறுவனங்கள் விடுமுறை விடவில்லை என்று புகார்கள் கூறப்படுகிறது.  வாக்குப் பதிவு சதவீதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும் என அந்தத் துறையினர் தெரிவித்தனர்.
வேலூர் மக்களவை தேர்தல் (2019)    72 சதவீதம்
பேரவைத் தேர்தல் (2016)    75.43 சதவீதம்
மக்களவைத் தேர்தல் (2014)    74.58 சதவீதம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com