மருத்துவக் கழிவு மேலாண்மை விதியின் கீழ் அங்கீகாரம் பெற உத்தரவு
By DIN | Published On : 09th August 2019 07:48 AM | Last Updated : 09th August 2019 07:48 AM | அ+அ அ- |

மருத்துவக் கழிவுகளைக் கையாளும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதி 10-இன் கீழ் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்து அங்கீகாரம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சுற்றுச்சூழல் வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதி 10-இன் கீழ் மருத்துவக் கழிவுகளைக் கையாளும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் படிவம் 2-இல் மாசுக்கட்டுபாட்டு வாரியத்துக்கு விண்ணப்பம் செய்து படிவம் 3-இல் அங்கீகாரம் பெற வேண்டும். அத்தகைய அங்கீகாரத்தின் காலாவதியின் தேதியானது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் வழங்கப்படும் இசைவாணையுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு வழங்கப்படும்.
அரசு, தனியார் மருத்துவமனைகள், புறநோயளிகளின் பிரிவுகள், கால்நடை மருத்துவமனைகள், விலங்கின சோதனைக் கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா ஹோமியோபதி மருத்துவமனைகள், ஆராய்ச்சி, மருத்துவக் கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், மருத்துவ, அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்ததான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள், தடயவியல் ஆய்வகங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஆகியவற்றுக்கும் இந்த விதி பொருந்தும்.
தமிழகத்திலுள்ள இத்தகைய நிறுவனங்களும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் நீர், காற்று மாசு தடுப்பு விதிகளின் கீழ் இசைவாணையையும், மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகாரத்தையும் உடனடியாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். படுக்கை வசதி இல்லாத மருத்துவ நிறுவனங்கள் தாமதமின்றி மருத்துவக் கழிவு மேலாண்மை விதியின் காலாவதியில்லாத அங்கீகாரத்தையும் பெற வேண்டும். அவ்வாறு மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளுக்கு இணங்க தவறியவர்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையை விதிக்கவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.