சுடச்சுட

  

  அரக்கோணத்தை அடுத்த கோணலம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  அரக்கோணத்தை அடுத்த கோணலம் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி வளாகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. அடுத்த 30 ஆண்டுகளில் இந்த தொட்டி பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலைக்குள்ளானதால் அதே கிராமத்தில் வேறு இடத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த பழைய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை இடிக்க அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
  இத்தொட்டியில் இருந்து சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது கீழே விழுகின்றன. மேலும், இந்த தொட்டி தானாக இடிந்து விழும்  நிலை உள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் அதிக அளவில் மழை பெய்யும்போது இந்த தொட்டி இடிந்து விழும் என்று பொதுமக்கள் அச்சமடைகின்றனர். 
  இந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு கீழே அங்கன்வாடி மையமும், அருகிலேயே நடுநிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 14 குழந்தைகளும், தொடக்கப்பள்ளியில் சுமார் 35 மாணவர்களும் பயிலுகின்றனர். இந்நிலையில், இத்தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால், இந்த அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப கிராம மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
  இதனால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இந்த அங்கன்வாடி மையத்தை தற்போது தனியார் கட்டடத்துக்கு மாறியுள்ளது. இந்த தனியார் கட்டடம் போதிய வசதிகள் இல்லாமல் உள்ளதால் இந்த மையத்துக்கு வர குழந்தைகள் மறுக்கின்றனர். 
  மேலும், இந்த பழைய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு அருகிலேயே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் உள்ளது. அப்பள்ளி மாணவர்கள் இந்த தொட்டி அருகே சென்று விளையாடுகின்றனர். 
  இந்நிலையில் இத்தொட்டி இடிந்து விழுந்தால் மாணவர்கள் பாதிக்க நேரிடும் வாய்ப்புள்ளது. 
  எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அந்த பழைய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி மையத்தை மீண்டும் அரசு கட்டடத்துக்கே கொண்டு வர வேண்டும் என கோணலம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai