Enable Javscript for better performance
லாரி கடத்தலில் கைதான 4 பேரின் கை, கால் முறிவு- Dinamani

சுடச்சுட

    

    கன்டெய்னர் லாரி கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள 4 பேரின் கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸார் துரத்தும்போது கீழே விழுந்ததில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சென்னையை சேர்ந்த வெங்கடேசனின் கன்டெய்னர் லாரி, சென்னை துறைமுகத்திலிருந்து வாகன உதிரி பாகங்களுடன் புதன்கிழமை இரவு ஓசூருக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த துரை ஓட்டிச் சென்றார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில், லாரியை நிறுத்திவிட்டு ஹோட்டலில் உணவருந்தச் சென்றார். 
    அந்த சமயத்தில் நெடுஞ்சாலை கொள்ளையர்கள் சிலர் லாரியை கடத்திச் சென்றனர். ஓட்டுநர் உடனடியாக லாரி உரிமையாளருக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் அளித்ததுடன், அருகே உள்ள ரத்தினகிரி காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். லாரியில் இருந்த ஜி.பி.எஸ் கருவியின்மூலம் அந்த லாரி வேலூரைக் கடந்து கொணவட்டம் நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. 
    உடனடியாக வேலூர் போலீஸாருக்கு தகவல் அளித்து,  உஷார்படுத்தியதையடுத்து, அப்துல்லாபுரம் பகுதியில் கன்டெய்னர் லாரியை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். 
    அப்போது லாரியிலிருந்த 5 பேரை போலீஸார் பிடிக்க முயன்றபோது அதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டதாகவும், மற்ற 4 பேரும் சிக்கிக் கொண்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 
    விசாரணையில் அவர்கள் வேலூர் விருதம்பட்டு லோகேஷ் (21), முத்துமண்டபம் அன்பழகன் (24), சேண்பாக்கம் அசோக்குமார் (29), ராகேஷ் என்கிற ராம்குமார் (22) என்பதும் தெரியவந்தது.
     மேலும், வேலூர் தொரப்பாடியிலுள்ள அரசு வேளாண்மைத் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் யாசீம் என்பவர் இந்த கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இவர்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வாகனங்களைக் கடத்திச்சென்று வேலூர் முத்துமண்டபம் பகுதியில் வைத்து, அதன் உதிரி பாகங்களைப் பிரித்து விற்பனை செய்து வந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தலைமறைவாக உள்ள யாசீமை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களிடமிருந்து கன்டெய்னர் லாரி, இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன. 
    இதனிடையே, பிடிபட்ட 4 பேருக்கும் கை, கால் முறிவு ஏற்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
    கன்டெய்னர் லாரி கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீஸார் துரத்தும்போது, கீழே விழுந்ததில் அவர்களுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டதாகவும், குணமடைந்தப் பிறகு 4 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுவர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai